மொனராகலை – தனமல்வில பகுதியில் 16 வயது பாடசாலை மாணவியை தவறான நடவடிக்கைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பான மருத்துவ பரிசோதனையை மேற்கொண்ட ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சட்ட வைத்திய அதிகாரி, தனது மகளை பரிசோதித்த போது திட்டியதாகவும், மிரட்டும் வகையில் நடந்து கொண்டதாகவும் கடந்த வாரம் தனமல்வில சிறுமியின் தாயார் முறையிட்டமையை அடுத்தே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவி 22 மாணவர்களால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டதாக பொலிஸ் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் தாயார் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்தநிலையில் சட்ட வைத்திய அதிகாரியின் கடுமையான செயற்பாட்டிற்கு பிறகு தனது மகள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுமியின் தாய் கூறியுள்ளார்.
மேலும், குறித்த சிறுமி பொய் சொல்வதாக தெரிவித்தே அவரை சட்ட வைத்திய அதிகாரி திட்டியதாக தாயார் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, கைது செய்யப்பட்ட சட்ட வைத்திய அதிகாரி, சனிக்கிழமை 300,000 ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, சம்பவத்தில் தொடர்புடைய 20இற்கும் மேற்பட்ட மாணவர்கள் விசாரணையின் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
அத்துடன், சம்பவத்தை மூடிமறைத்த குற்றச்சாட்டில் சிறுமி படித்த பாடசாலையின் அதிபர் உட்பட நான்கு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments are closed.