வெளிநாட்டவர்களின் வாக்களிப்பு தொடர்பில் தகவல்

16

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டவர்களின் வாக்களிப்பு தொடர்பில் சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் கடவுச்சீட்டுக்களைப் போலியாக அச்சடித்து, அவர்களின் வாக்குகளை மோசடியாக பெற்றுக்கொள்ளும் செயற்றிட்டம் ஒன்று முன்னெடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்தத் தகவல் முற்றிலும் பொய்யானது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் வாழும் சுமார் 25 இலட்சம் இலங்கையர்களின் கடவுச்சீட்டை போலியாக அச்சடித்து அவர்களின் வாக்குகளை சூறையாடும் பாரிய திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த மோசடி வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் அந்தச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் எங்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என இதுவரை இல்லாத சட்டம் திடீரென கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், யாரேனும் ஒருவர் வேறொரு பிரதேசத்தில் வாக்களிக்கும்போது அவரை அடையாளங்காணமுடியாவிடின், அவரது கடவுச்சீட்டை சரிபார்த்து அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும்நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பற்ற சூழல் காரணமாக வாக்காளர்களுக்கு வேறொரு இடத்திலிருந்து வாக்களிக்க வாய்ப்பு இருந்ததாகவும், அது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட முறையல்ல எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.