சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து வெளியான தகவல்

20

ஜனாதிபதி தேர்தலில் (Presidential Election) சிறிலங்கா சுதந்திர கட்சி (SLFP) சார்பில் களமிறங்குவதற்கு இதுவரையில் வேட்பாளர் ஒருவர் தெரிவு செய்யப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை முன்னிலைப்படுத்துவது என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டியுள்ளது.

கட்சியின் அமைப்பாளர்கள், தொகுதி அமைப்பாளர்களுக்கு கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளேன். அவர்களுடனும் ஏனைய உறுப்பினர்களுடன் பேசி தீர்மானமொன்றை எடுப்போம்.

அத்துடன், தேர்தலில் களமிறங்குவதாக அறிவித்துள்ள எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிப்பதாக சுதந்திர கட்சி எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை. நாடு மற்றும் கட்சியின் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து பொறுத்தமானதொரு தீர்மானத்தை எடுப்போம்.

விஜேதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) சிறிலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அல்ல. சுதந்திர கட்சியில் எவரும் தீர்மானத்தை முன்வைத்து அவரை வேட்பாளராகக் களமிறக்கவுமில்லை.

வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கி வெற்றி பெறக் கூடிய நிலைமையில் சுதந்திர கட்சி இல்லை என்ற யதார்த்தத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) நிர்வாகத்தின் கீழ் கட்சி சுக்கு நூறாக சிதறியுள்ளது. இந்த கட்சியைக் கட்டியெழுப்புவதற்கு மேலும் 5 ஆண்டுகளாவது பாடுபட வேண்டும்.அவரும், நிமல் சிறிபா டி சில்வாவும் (Nimal Siripala de Silva) எடுத்த தவறான தீர்மானங்கள் கட்சியின் சீரழிவுக்கு வழி வகுத்தன.

எனவே கட்சியை கட்டியெழுப்புவதற்கு பதிலாக தேர்தலில் போட்டியிட்டு ஒன்று அல்லது இரண்டு இலட்சம் வாக்குகளைப் பெற நான் தயாராக இல்லை. சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு நான் தீர்மானிக்கவில்லை. தனிநபராக என்னால் அவ்வாறான தீர்மானத்தை எடுக்க முடியாது.

தேர்தல் குறித்த தீர்மானம் கட்சியின் தீர்மானமாக இருக்க வேண்டும். கட்சி எந்த தீர்மானத்தை எடுத்தாலும் அதற்கு நான் ஆதரவளிப்பேன்“ என தெரிவித்தார்.

Comments are closed.