பொதுமக்கள் – வைத்தியர்கள் முரண்பாடு! அர்ச்சுனாவின் எச்சரிக்கை

15

வைத்தியர்கள் மீண்டுமொருமுறை பணிப்புறக்கணிப்பு செய்தால் பொதுமக்களுக்கும் வைத்தியர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படக்கூடும் என வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archuna) தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு நேற்று (15.07.2024) வருகை தந்த வைத்தியர் அர்ச்சுனாவிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நேற்றுடன் என்னுடைய விடுமுறை முடிவடைந்ததால் நான் இன்று பணிக்குத் திரும்பியுள்ளேன். நான் வைத்தியர் ரஜீவை தொந்தரவு செய்வதற்கோ வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களைத் தொந்தரவு செய்வதற்காகவோ இங்கு வரவில்லை.

வைத்தியர் ரஜீவ் என்னுடைய வேலையைச் செய்தால் எனக்குச் சந்தோசம். கொழும்பில் முக்கிய அதிகாரிகளோடு கலந்துரையாடலில் ஈடுபட்டேன். நாளை சுகாதார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளனர்.

வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் அந்தக் குழுவிடம் பொதுமக்கள் தங்கள் முறைப்பாடுகளை முன்வைக்கலாம். நாளை சுகாதார அமைச்சரால் எனக்கு உத்தியோகபூர்வ கடிதம் ஏதும் தரப்பட்டால் அதனை முழுமையாக ஏற்கத் தயாராகவுள்ளேன்.

வைத்தியர்கள் மீண்டுமொரு முறை பணிப்புறக்கணிப்புச் செய்தால் பொதுமக்களுக்கும் வைத்தியர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படக்கூடும். அதனை வைத்தியர்கள் உணர வேண்டும். நாங்கள் பொதுமக்களின் மனதை வெல்ல வேண்டும்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்களால் பாலியல் தொந்தரவுகள் இடம்பெறுகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் அதனை முறைப்பாடு செய்ய முன்வராததால் கள்வர்கள் தப்பித்துக் கொள்கின்றார்கள். அதனைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது” என்றார்.

Comments are closed.