தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை: இந்தியாவின் தீர்ப்பாயம் விடுத்துள்ள கோரிக்கை

9

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ‘சட்டவிரோத அமைப்பு என்று ஏன் பிரகடனப்படுத்தக் கூடாது?’ என்பதற்கான காரணங்களை விளக்குமாறு, விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு இந்தியாவின் தீர்ப்பாயம் ஒன்று அறிவித்தல் விடுத்துள்ளது.

டெல்லி மேல் நீதிமன்றில் இயங்கும் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்கும் சட்டத் தீர்ப்பாயம் கடந்த 14ம் திகதி இந்த அறிவித்தலை அனுப்பியுள்ளது.

கடந்த மே மாதம் இந்தியா, விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்திருந்தது. 2009ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பு இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டாலும், சர்வதேச அளவில் விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாடுகள் தொடர்வதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டிருந்த குறிப்பு ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மேலும் விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச செயற்பாடுகள், இன்னும் இந்தியாவின் இறைமையைப் பாதிக்கும் வகையிலேயே அமைந்திருப்பதாக, இந்திய மத்திய அரசாங்கத்தின் சார்பில் மேற்குறிப்பிட்ட தீர்ப்பாயத்தில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே விடுதலைப் புலிகள் அமைப்பை சட்டவிரோத அமைப்பு அல்லவென்று அறிவிக்குமாறு இந்த தீர்ப்பாயத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அவ்வாறு அறிவிக்க வேண்டியதற்கான காரணங்களை விடுதலைப் புலிகளிடமே இந்தத் தீர்ப்பாயம் கோரியுள்ளது.

இதற்காக 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தீர்ப்பாயத்தின் அடுத்த அமர்வு ஜூலை மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பு , சட்டத்தரணி ஊடாக தமது விளக்கத்தையோ அல்லது ஆட்சேபனையையோ பதிவு செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1991ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் இந்தியாவில் பயங்கரவாத அமைப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பு பிரகடனம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில் கடந்த மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீடித்தது. தமிழ்நாடு அரசும் இது தொடர்பாக அறிவிக்கையை கடந்த மாதம் 18ஆந் திகதி வெளியிட்டிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீடிப்பது தொடர்பான அறிவிக்கையில், “விடுதலைப் புலிகள் அமைப்பு மக்களிடையே பிரிவினைவாதத்தை வளர்க்கிறது. இந்தியாவில்- தமிழ்நாட்டில் தங்களது ஆதரவு தளத்தை வலுப்படுத்துகிறது.

ஆகையால் இந்தியாவின் சட்டவிரோதச் செயல்கள் (தடுப்பு) சட்டம் 1967இன் பிரிவு 3இன் உட்பிரிவு 1,3 ஆகியவற்றைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகள் அமைப்பானது இந்தியாவின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றுக்குப் பாதகமான நடவடிக்கைகளில் இப்போதும் ஈடுபட்டு வருகிறது. 2009ஆம் ஆண்டு இலங்கை யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கூட விடுதலைப் புலிகள் அமைப்பு தங்களது தமிழர்களுக்கான சுதந்திர நாடு என்ற கோட்பாட்டை கைவிடவில்லை.

தற்போது எஞ்சியிருக்கும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை ஒருங்கிணைத்து மீண்டும் எழுச்சி பெறச் செய்யக் கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தியாவில் தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் இந்த ஆதரவு குழுக்கள் பிரிவினைவாதத்தை வலுப்படுத்துகின்றன.

விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்து தமிழருக்குமான தனிநாடு (அகன்ற தனித் தமிழ்நாடு) என்ற கோட்பாடு இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாகும்.

இந்தியாவின் ஒரு பகுதியை இந்தியாவில் இருந்து பிரிப்பதற்கான நடவடிக்கையாகும். ஆகையால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகள் நீடிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதற்கு மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ எம்பி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். வைகோ வெளியிட்ட அறிக்கையில், “2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்த பிறகும் விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழீழ தனி நாட்டுக் கோரிக்கையை கைவிடவில்லை.

அதற்கான ஆதரவு மற்றும் நிதித்திரட்டல் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது” என்று தடை நீடிப்பு ஆணையில் குறிப்பிடுகிற இந்திய ஒன்றிய அரசு, “விடுதலைப்புலிகளின் அமைப்பு தமிழ்நாட்டில் இரகசியமாக செயல்படுகிறது.

அனைத்து தமிழர்களுக்குமான தனி நாடு என்ற கோரிக்கையில் இந்தியாவில் தமிழ்நாட்டையும் சேர்த்துள்ளது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு புலிகளின் அமைப்பு எதிரானது மட்டுமல்ல.

இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது” என்ற அபாண்டமான பொய் குற்றச்சாட்டையும் புலிகள் அமைப்பின் மீது சுமத்தியுள்ளது” என விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் மத்திய அரசின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயமானது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்க விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பி உள்ளது. அதில், இந்தியாவில் உங்கள் அமைப்பை ஏன் சட்டவிரோதமாக அமைப்பாக பிரகடனம் செய்து தடை செய்யக் கூடாது என்பதை விளக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.