இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடைகளை வரவேற்பதாக கனேடிய நீதி அமைச்சர் கரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறலின் மற்றுமொரு முக்கிய கட்டமாக இது அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய இராச்சியம் விதித்துள்ள தடை தொடர்பில் தனது X பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அதிகாரிகளுக்கு எதிராக ஐக்கிய இராச்சியம் தடைகளை விதித்துள்ளதை நான் வரவேற்கின்றேன். இலங்கையின் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கையாக இது காணப்படும்.
2023இல் கனடா மகிந்த ராஜபக்ஸ, கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோருக்கு எதிராக விதித்த தடைகளை தொடர்ந்து ஐக்கிய இராச்சியம் தடைகளை விதித்துள்ளது.
இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் கனடா தொடர்ந்து பாடுபடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதானி சவேந்திர சில்வா உள்ளிட்ட நால்வருக்கு ஐக்கிய இராச்சியம் தடைகளை விதித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்களுக்கு இவர்கள் பொறுப்புக்கூற வேண்டியுள்ளதாக தெரிவித்து குறித்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.