அல் ஜசீரா ஊடகவியலாளரை இலக்கு வைத்த இஸ்ரேலிய கலங்கள்..!

0 10

அல் ஜசீரா ஊடகவியலாளரை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அல் ஜசீரா முபாஷரில் பணிபுரிந்த ஹோசம் ஷபாத் என்ற ஊடகவியலாளரே நேற்று வடக்கு காசாவில் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளார்.

அவரது கார் பெய்ட் லஹியாவின் கிழக்குப் பகுதியில் குறிவைக்கப்பட்டதாக நேரில் கண்டவர்கள் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய காசாவில் உள்ள டெய்ர் எல்-பலாவில் இருந்து செய்தி வெளியிடும் அல் ஜசீராவின் தாரிக் அபு அஸ்ஸூம் என்ற மற்றைய ஊடகவியலாளர், ஷபாத், காசாவில் மற்றொரு இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்ததாகக் கூறினார், ஆனால் அவர் தொடர்ந்து செய்தி அறிக்கையிடுவதை வலியுறுத்தினார்.

“எந்தவொரு முன் எச்சரிக்கையும் கொடுக்காமல் இஸ்ரேலிய இராணுவம் அவரது வாகனத்தை குறிவைத்தது” என்று குறித்த ஊடகவியலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஹோசம் ஷபாத் தனது எக்ஸ் தளத்தில் முன்னதாக வெளியிட்டுள்ள பதிவில் “நீங்கள் இதைப் படிக்கிறீர்கள் என்றால், நான் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளால் கொல்லப்பட்டிருக்கிறேன் – பெரும்பாலும் குறிவைக்கப்பட்டுள்ளேன் – என்று அர்த்தம்” என்று எழுதியுள்ளார்.

அத்துடன், கடந்த 18 மாத காலப் போரில், தனது மக்களுக்காக “ஒவ்வொரு தருணத்தையும்” அர்ப்பணித்துள்ளதாக ஷபாத் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “வடக்கு காசாவில் நடந்த கொடூரங்களை நிமிடத்திற்கு நிமிடம் ஆவணப்படுத்தினேன், அவர்கள் புதைக்க முயன்ற உண்மையை உலகுக்குக் காட்ட வேண்டும் என்ற உறுதியுடன் நடைபாதைகளில், பாடசாலைகளில், கூடாரங்களில் – என்னால் முடிந்த இடங்களில் எல்லாம் தூங்கினேன்.

ஒவ்வொரு நாளும் உயிர்வாழ்வதற்கு போராட்டமாக இருந்தது. பல மாதங்களாக நான் பசியைத் தாங்கினேன், ஆனாலும் என் மக்களின் பக்கத்தை நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்கவில்லை.

நான் இப்போது உங்களிடம் கேட்கிறேன், காசாவைப் பற்றிப் பேசுவதை நிறுத்தாதீர்கள். உலகம் விலகிப் பார்க்க விடாதீர்கள். பாலஸ்தீனம் சுதந்திரம் பெறும் வரை போராடுங்கள், எங்கள் கதைகளைச் சொல்லிக்கொண்டே இருங்கள்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு பத்திரிகையாளர்களின் கொலையுடன், ஒக்டோபர் 2023ஆம் ஆண்டு முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஊடக ஊழியர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது என்று காசாவில் உள்ள அரச ஊடக அலுவலகம் (GMO) தெரிவித்துள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், GMO, “இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் பாலஸ்தீன பத்திரிகையாளர்களை குறிவைத்து, கொல்லப்படுவதையும், படுகொலை செய்வதையும் வன்மையாகக் கண்டிக்கிறது” என தெரிவித்துள்ளது.

அத்துடன், “காசாவில் பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக வல்லுநர்களுக்கு எதிரான இந்த திட்டமிட்ட குற்றங்களை” கண்டிக்க பத்திரிகை சார்பான குழுக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், இஸ்ரேல் மற்றும் அதன் முக்கிய கூட்டாளியான அமெரிக்கா, “இனப்படுகொலையில் பங்கேற்ற நாடுகளான ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவை இந்த கொடூரமான குற்றத்தைச் செய்ததற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும்” என்றும் GMO கூறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.