உக்ரைனுக்கான(Ukraine) அமெரிக்க இராணுவ உதவியை ட்ரம்ப் நிர்வாகம் இடைநிறுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அத்துடன், அமைதியில் கவனம் செலுத்துவதில் ஜனாதிபதி தெளிவாக உள்ளார் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்ப்(Donald Trump) , துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி ஆகியோருக்கு இடையேயான சர்ச்சைக்குரிய சந்திப்பை அடுத்தே, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின்(Viladimir Putin) படையெடுப்பை அடுத்து, உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் முக்கிய நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது.
ஆனால் ட்ரம்ப் மீண்டும் பதவிக்கு வந்தமை, மோதலை நோக்கிய அமெரிக்க கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது, அத்துடன், ரஷ்யா(Russia) தொடங்கிய போருக்கு உக்ரைனை ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷ்யாவுடன் போர் நிறுத்த உடன்பாட்டை எட்ட வேண்டும் அல்லது “நாங்கள் வெளியேறிவிட்டோம்” என்று செலென்ஸ்கியிடம், ட்ரம்ப் கூறினார், மேலும் உக்ரைன் மற்றும் பைடன் நிர்வாகத்தின் ராஜதந்திரம் இல்லாததால் போர் நீடித்தது என்ற கூற்றை எதிர்த்ததன் மூலம், உக்ரைன் ஜனாதிபதி, அவமரியாதை செய்ததாக வான்ஸ் குற்றம் சாட்டினார்.