நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) எவ்வாறு சட்டப் பட்டம் பெற்றார் என்பது குறித்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக பதில் காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய (Priyantha Weerasooriya) தெரிவித்துள்ளார்.
சட்டப்பரீட்சையில் மோசடி செய்தே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சட்டத்தரணியானார் எனத் தெரிவித்து பல முறைப்பாடுகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த விடயம் தொடர்பில் சட்டக் கல்லூரியின் துணைவேந்தரின் பரிந்துரையைப் பெற்ற பிறகு மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் பதில் காவல்துறை மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
11 ஆண்டுகளுக்கு முன்னர் சட்டமாணி பரீட்சையின் போது பிரத்தியேக குளிரூட்டப்பட்ட அறையில் இருந்தவாறு நாமல் ராஜபக்ச தோற்றியதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.
குறித்த விடயம் தொடர்பில் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிக்கு முறைப்பாடளித்ததாகவும், அதனை அவர் கண்டு கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சட்டக்கல்லூரியின் துணைவேந்தரிடம் தெரிவிப்பதற்கு சென்றபோது அவர் இருக்கவில்லை என லஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் அதிகாரத்தின் தலைவர் ஜமுனி சமந்தா துஷாராவினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.