வாகன விபத்து தொடர்பில் கைதான இளம் குடும்பஸ்தர் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த நிலையில் நேற்று (11) காவல்நிலையம் முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு குழந்தைக்கு தந்தையான 24 வயதுடைய ஆர்.எம். சமித டில்ஷான் என்ற இளம் குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார். வாதுவ பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வாகன விபத்து சம்பவம் தொடர்பில் வாதுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பும் போது இரத்த வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்ட தனது கணவர் தன்னை காவல்துறையினர் தடியால் கடுமையாக தாக்கியதாகவும், நெஞ்சு வலிக்கிறது என்றும் கூறியதாக அவருடைய மனைவி தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி ரோஷினி லக்மாலி பாணந்துறை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இரத்த வாந்தி எடுத்த நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். பின்னர் அவர் இறந்துவிட்டதாக ஊடகங்களிடம் மனைவி கூறினார்.
இதேவேளை காவல்துறையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்ததாக தெரிவித்து, காவல் நிலையத்தின் முன்பும் அதைச் சுற்றியும் சுமார் 40 பேர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தையடுத்து வாதுவ காவல்துறையினரின் பிரதான நுழைவாயில் வீதித் தடைகளினால் முற்றாக அடைக்கப்பட்டிருந்ததுடன் கிட்டத்தட்ட 20 அதிகாரிகள் கொண்ட குழு பிரதான வீதியை மறித்து பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தது.
Comments are closed.