ரயில் விபத்திற்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

15

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்திற்கு மோடி அரசை பொறுப்பேற்க வைப்போம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கம் நியூ ஜல்பைகுரியில் கஞ்ஜன்ஜங்கா பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது.

சரக்கு ரெயில் மோதியதில் பயணிகள் ரெயிலின் கடைசிப் பெட்டி தூக்கி வீசப்பட்டதாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் சிக்கிக்கொண்ட பயணிகளில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 25 பேர் காயமுடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்கும் பணிகள் தீவரமடைந்துள்ள நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் கஞ்சன் ஜங்காவில் நடந்த ரயில் விபத்துக்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும் என ராகுல் காந்தி தனது X தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.

அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று நம்புகிறேன்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு அரசு உடனடியாக முழு இழப்பீடு வழங்க வேண்டும்.

நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் அனைத்து உதவிகளையும் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ள ரெயில் விபத்துக்கள் மோடி அரசின் தவறான நிர்வாகத்தின் மற்றும் அலட்சியப் போக்கின் நேரடி விளைவாகும். இதனால் தினசரி பயணிகளின் உயிர் மற்றும் உடைமை இழப்பு ஏற்படுகிறது.

பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில், இந்த அப்பட்டமான அலட்சியத்தை தொடர்ந்து கேள்வி எழுப்பி, இந்த விபத்துக்களுக்கு மோடி அரசை பொறுப்பேற்க வைப்போம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் ரயில் விபத்தில் இறந்தோருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.