பொது நிர்வாகம், மாகாண சபைகள் அமைச்சர் சந்தன அபேரத்னவின்(Chandana Abeyratne) பெயருக்கு முன்னால் பேராசிரியர் என்ற பட்டத்தை அரசாங்கத்தின் எந்த ஆவணத்திலும். குறிப்பிட வேண்டாம் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மூத்த உதவிச் செயலாளர் (நிர்வாகம்) அமைச்சின் பிரிவுத் தலைவர்களுக்கு எழுத்துபூர்வமாக அறிவித்துள்ளார்
அபேரத்னவின் பெயருக்கு முன்பு பேராசிரியர் என்ற பட்டம் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், அந்தப் பட்டம் அமைச்சின் வலைத்தளத்திலும் காட்டப்பட்டிருந்ததாகவும் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
அபேரத்ன பேராசிரியர் பதவியை வகித்தாலும், தற்போது அவர் ஒரு பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால், பேராசிரியர் பட்டம் பயன்படுத்தப்பட முடியாது என்றும், எனவே கலாநிதி பட்டம் மட்டுமே திரு. என்ற பட்டத்திற்கு முன்னால் பயன்படுத்தப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இதற்கிடையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேனவின்(Krishantha Abeysena) பெயருக்கு முன்னால் இடம்பெற்ற பேராசிரியர் பட்டமும் சமீபத்தில் நாடாளுமன்ற வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்டது.
இது அமைச்சரின் தன்னார்வ வேண்டுகோளின் பேரில் செய்யப்பட்டது. ஒரு சிறப்பு மருத்துவரான அபேசேன, சிறிது காலம் பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
பேராசிரியர் பட்டம் பெற்ற ஒரு பேராசிரியர் பல்கலைக்கழகப் பணியை விட்டு வெளியேறிய பிறகு அந்தப் பட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்றும், பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய பிறகு வாழ் நாள் பேராசிரியர் பட்டம் வழங்கப்பட்டால் மட்டுமே அதைப் பயன்படுத்த முடியும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Comments are closed.