யாழில் மைதானத்திற்குள் நுழைந்த வன்முறை கும்பலால் பரபரப்பு

13

யாழ்ப்பாணத்தில் (Jaffna) கரப்பந்தாட்ட இறுதி போட்டி நடைபெறவிருந்த மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொடிகாம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள விளையாட்டுக் கழகம் ஒன்றினால் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி ஒன்று நடத்தப்பட்டு வந்த நிலையில் அதன் இறுதி போட்டி நேற்றைய தினம் (15.06.2024) சனிக்கிழமை நடைபெறவிருந்தது.

அதற்கான ஏற்பாடுகளை கழக உறுப்பினர்கள் செய்து கொண்டிருந்த வேளை 12 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று மைதானத்திற்குள் கூரிய ஆயுதங்களுடன் நுழைந்து போட்டி ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

அதன் போது, இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்நிலையில், அவர்களை துரத்திச் சென்ற அங்கிருந்த பொதுமக்கள் அவர்களில் நான்கு பேரை மடக்கிப் பிடித்து மின் கம்பங்களில் கட்டி வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அறிந்த கொடிகாமம் பொலிஸார், சம்பவ இடத்திற்கு சென்று மின் கம்பங்களில் கட்டி வைக்கப்பட்டிருந்த நால்வரையும் மீட்டு அவர்களை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

அத்துடன், ஏனைய தாக்குதலாளிகளையும் கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலும், கைதானவர்களை இன்றையதினம் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Comments are closed.