வியாழேந்திரன் வீட்டுக்கு முன் நடந்த படுகொலை : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

0 5

மட்டக்களப்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் (S. Viyalendiran) வீட்டுக்கு முன்பாக துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞரின் சம்பவத்துடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்ட அமைச்சரின் வாகன சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை மட்டக்களப்பு (Batticaloa) நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (03) பிறப்பித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுன் 21 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்தின் வீட்டிற்கு முன்னாள் அமைச்சரின் மெய்பாதுகாப்பு உத்தியோகத்தர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 28 வயதுடைய பாலேந்திரன் என்ற இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதையடுத்து மெய்பாதுகாப்பு உத்தியோகத்தரை கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்டவர் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணிகளான ந.கமலதாஸ், வி.சுதர்ஷன் ஆகியோர் இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் உரிய விசாரணை நடாத்தப்படவில்லை என தொடர்ந்து ஆட்சோபித்து வந்ததுடன் உயிரிழந்தவரின் பெற்றோரும் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு மாற்றுமாறு சட்டத்தரணி ஊடாக கோரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில், குறித்த விசாரணையை கொழும்பு குற்றறத்தடுப்பு விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வந்த நிலையில் அமைச்சரின் வாகன சாரதியான தம்பான் என்றழைக்கப்படும் தனுசன் என்பவரை சந்தேகத்தின் பேரில் கொலை குற்றத்தின் அடிப்படையில் வெளிநாடு செல்ல இருந்து நிலையில் நேற்று (02) கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை சி.ஜ.டியினர் முன்நகர்வு பத்திரம் தாக்கல் செய்து முன்னிலைப்படுத்தியதையடுத்து, வழக்கு விசாரணையை எடுத்துக் கொண்ட நீதவான் அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அத்தோடு, குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அமைச்சரின் மெய்பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒரு வருடத்தின் பின்னர் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதுடன் மூன்று வருடத்திற்கு பின்னர் சந்தேகத்தில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.