இனம்சார்ந்த விடுதலையினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற வகையில் நாம் தமிழ்தேசிய கூட்டமைப்பாக ஒன்றிணைய வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.
செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் (Vino Noharathalingam) ஆகியோரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பெறப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் இன்றையதினம் (10) கழகங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியாவில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருடன் (Gajendrakumar) கலந்துரையாடல் ஒன்றை இன்று நடாத்துவதற்கு தீர்மானித்திருக்கிறோம்.
எமது நாடாளுமன்றக் குழுவில் ஒரு ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த ஒற்றுமை இல்லாமையினால் எமது தேசத்தில் பல மாற்றங்கள் உருவாகியுள்ளது. அது தொடர்ந்தால் இங்கு இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுவிடும்.
எனவே இனம்சார்ந்த விடுதலையினை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற வகையிலே நாம் ஒன்றிணைய வேண்டும். ஒன்றிணைந்தால் மக்கள் எங்களுடன் நிற்பார்கள்.
எனவே நாடாளுமன்றுக்குள்ளும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு அணியாக சேர்ந்து பொதுவிடயங்களில் ஒன்றாக குரல்கொடுக்கும் நிலையினை ஏற்படுத்தவேண்டும்.
அத்துடன் வடகிழக்கில் முன்னர் ஒன்றாக இருந்த கட்சிகளை மீள ஒன்றிணைத்து தமிழ்தேசிய கூட்டமைப்பாக செயற்படலாமா என்பது தொடர்பிலும் பேசிக்கொண்டிருக்கிறோம்.
அத்துடன் பெருவாரியான வாக்குகளை பெற்ற இந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி பேசியபோது ஒருமணிகூட வெளியில் இருந்து இறக்கமாட்டோம் என்று சொல்லியிருந்தார். ஆனால் இன்று நிலைமை மாறி இறக்குமதி செய்யும் சூழல் வந்துள்ளது.
சர்வதேச நாணய நிதிய விடயத்தில் எந்தவொரு மறுப்பும் தெரிவிக்காமல் இவர்கள் கையொயப்பம் இட்டுள்ளனர். எனவே இந்த நிலைமையில் அரசாங்கம் சென்றால் மீண்டும் வரிசையுகம் வரும் சந்தர்ப்பம் ஏற்படும்.
எனவே அரசாங்கம் நிதானமாக செயற்படவேண்டும். இன்று சாதாரண மக்கள் கூட தேங்காய் வாங்கமுடியாத நிலமை ஏற்ப்பட்டுள்ளது. எனவே ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் சூழலை மாற்றவேண்டும்” என தெரிவித்தார்.
Comments are closed.