வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள பிரபல பீசா விற்பனை நிலையம் அமைந்துள்ள கட்டடம், அனுமதிபத்திரத்திற்கு முரணாக அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில், பீசா கட்டடத்தின் உரிமையாளருக்கு எதிராக வவுனியா நகரசபையால் எச்சரிக்கை சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
குறித்த சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நகரசபை கட்டளைச்சட்டங்களின் பிரகாரமும் நகரப்பகுதிக்குள் முன்னெடுக்கப்படும் கட்டடங்களின் அபிவிருத்தி தொடர்பாகவும் வவுனியா நகரசபையிடம் முறையான அனுமதி பெற்றிருக்கப்பட வேண்டும்.
எனினும், குறித்த ஆதனத்தில் நகரசபையால் கடந்த 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அனுமதிக்கு முரணாக கட்டடம் அமைக்கப்பட்டு வணிகரீதியிலான நோக்கத்தில் இக் கட்டடம் இயங்குவதனால் அது தொடர்பாக குறிப்பிட்ட சில ஆவணங்களை நகரசபைக்கு சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டிருந்தது.
அந்தவகையில், திருத்திய வரைபடத்திற்கான கட்டட அனுமதி, அனுமதிக்கப்பட்ட வரைபடத்திற்கான குடிபுகுசான்றிதழ், சுற்றுச்சூழல் உரிமம்,வியாபார உரிமம் ஆகியவற்றை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சபையால் கோரப்பட்டிருந்தது.
எனினும் அது சமர்ப்பிக்கப்படாத நிலையில் மீளவும் ஏழு நாட்களுக்குள் அந்த ஆவணங்களை வழங்குமாறு கடந்த ஐந்தாம் திகதி சபையின் செயலாளரால் சவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலின் பிரகாரம் செயற்ப்படத்தவறின் நகரஅபிவிருத்தி அதிகாரசபையின் திருத்தச்சட்டங்களின் பிரிவுகளை மீறி நகரசபையின் அனுமதி பத்திரத்திற்கு முரனாக கட்டடம் அமைத்து செயற்படுவதாக கருதி நீதிமன்ற நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, குறித்த பீசா விற்பனை நிலையத்தினை அண்மையில் பார்வையிட்டிருந்த நகர சுகாதாரபரிசோதகர் விற்பனை நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது சீரான முறையில் முகாமைத்துவம் செய்யப்படவில்லை எனவும் அதனை முறையாக மேற்கொள்ளுமாறும் அறுவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, நேற்றைய தினம் (09) குறித்த விற்பனை நிலையம் பூட்டப்பட்டிருந்ததுடன் சில திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.