யாழில் நீண்ட நாட்களாக தேடப்பட்ட சந்தேக நபர் கைது

8

யாழ்ப்பாணத்தின்(Jaffna) பல்வேறு பகுதிகளில் 300 பவுண் நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்ட பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, பெருமளவு நகைகள், ஆவணங்கள், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் கைக்குண்டு என்பனவும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் பகுதி காவல்துறை பிரிவுகளில் கடந்த இரண்டு வருடங்களாக துவிச்சக்கரவண்டியில் முகத்தை மறைத்து சென்று நூதனமாக நகைகளை திருடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன.

மேற்படி சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினரால் நீண்ட காலமாக தேடப்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர் கொழும்பில் தலைமறைவாக இருந்த நிலையில் இந்திக்க தலைமையிலான யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் நேற்று முன்தினம் (05) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையின் போது சந்தேக நபரின் மனைவி அங்கிருந்து தப்பியோடியதுடன் சந்தேக நபரிடமிருந்து 90 பவுண் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, திருடிய நகைகளை விற்ற பணத்தில் சந்தேக நபர் கொழும்பில் சொகுசு வீடொன்றை அமைத்தமையும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட நகைகளை வாங்கிய கொழும்பைச் சேர்ந்த மூன்று பேரும் யாழ் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், பிரதான சந்தேக நபரை இன்று(07) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Comments are closed.