குற்றத்தை நிரூபிக்க தவறிய வழக்கு: நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு

5

ஹெராேயின் வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு எதிரான குற்றத்தை நிருபிக்க தவறியமையால் சந்தேகநபரை விடுவித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

இந்தத் தீர்ப்பு நேற்றையதினம் (21.11.2024) வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நபர், கடந்த 2020ஆம் ஆண்டு ஆவணி மாதம், தீங்கு விளைவிக்க கூடிய 16 கிராம் 40 மில்லி கிராம் ஹெரோயினை உடமையில் வைத்திருந்ததற்காக வவுனியா போதைத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, பொலிஸ் விசாரணையின் அடிப்படையில் வவுனியா நீதவான் நீதிமன்றில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், சந்தேகநபரால் பிணை விண்ணப்பம் கோரப்பட்ட போதும் அது நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த எதிரிக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் நிறைவுபெற்று 2022.10.20 அன்று சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இரண்டு குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப் பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

எனினும், தான் குற்றவாளி இல்லை என சந்தேகநபர் தொடர்ந்தும் தெரிவித்து வந்துள்ளார்.

சந்தேகநபர் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா மற்றும் சட்டத்தரணி அக்மல் ஆகியோரும் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக ஆறுமுகம் தனுஷ்காந்தும் முன்னிலையாகி விளக்கம் நடைபெற்றது.

எவ்வாறாயினும், சந்தேகநபருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இன்மையால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Comments are closed.