க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான அனைத்து பிரத்தியேக வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது.
குறித்த தடையானது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவல் பரீட்சை திணைக்களத்தினால் (Department of Examinations) வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 2024ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
அத்துடன், உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பித்த பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணை அந்தந்த பாடசாலை அதிபருக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டை மற்றும் நேர அட்டவணை அவர்களின் தனிப்பட்ட முகவரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தபாலில் அனுமதி அட்டைகளைப் பெறாத தனியார் விண்ணப்பதாரர்கள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இலிருந்து நவம்பர் 18ஆம் திகதி முதல் அவற்றைப் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், அனைத்து பரீட்சார்த்திகளும் http://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தில் நவம்பர் 18ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிவரை திருத்தங்களைச் செய்யலாம் எனவும், பரீட்சை நிலையங்கள் மாற்றப்பட மாட்டாது எனவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.