அநுர அரசுக்கு எதிராகச் செயற்பட மாட்டோம்: அடித்துரைக்கும் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்

27

நாங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் தேசிய மக்கள் சக்தியின் அரசுக்கு எதிரானவர்கள் அல்லது எதிர்ப்பானவர்கள் அல்ல என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் (C. V. K. Sivagnanam) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) அமைந்துள்ள தமது அலுவலகத்தில் நேற்றையதினம் (16.11.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தமிழரசுக் கட்சி இருந்தபோது நாங்கள் ஆறு ஆசனங்களைப் பெற்றிருந்தோம்.

ஆனால், இப்போது தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிட்டு எட்டு ஆசனங்களை அதுவும் பல்வேறு தரப்பினரின் எதிர்புகளுக்கு மத்தியில் பெற்றிருக்கின்றது.

எங்கள் கட்சிக்கு வாக்களித்த அத்தனை மக்களுக்கும் அதேபோல் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கின்றோம்.

எமது மக்களுடைய உரிமை சார்ந்த எமது பயணம் தொடரும். இதேவேளை, தேசிய மக்கள் சக்தி அலையாக அல்லது சுனாமியாக இந்த முறை வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றது.

இந்தக் கட்சி மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றிருக்கின்றது. இந்தக் கட்சியில் யாழ்ப்பாணத்திலும், ஏனைய இடங்களிலும் சிலர் தெரிவு செய்யப்பட்டும் உள்ளனர்.

ஆகவே, நாங்கள் கட்சி சார்ந்து அல்லது கொள்கை சார்ந்து சொல்லக்கூடிய விடயம் என்னவென்றால் அநுர தரப்பினர் முன்னைய காலத்தில் 13 ஆவது திருத்தத்துக்கும் மாகாண சபை முறைமைக்கு எதிராகவும் போராடியவர்கள்.

ஆனால், இப்போது தமிழ் மக்கள் அதனை விரும்புவதாலும், புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரவுள்ளதாலும் அந்த முறைமை அப்படியே இருக்கட்டும் என்றவாறான மாற்றமொன்று அவர்களிடத்தே ஏற்பட்டிருக்கின்றது.

அன்று அநுர தரப்பு எதிராக நின்றாலும் இப்போது மாற்றம் வந்துள்ளது. அந்த மாற்றம் என்பது தமிழ் மக்களின் அனைத்து விடயங்களிலும் ஏற்பட வேண்டும்.

ஆகையினால் நாங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் உங்கள் அரசுக்கு எதிரானவர்கள் அல்லது எதிர்ப்பானவர்கள் அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகின்றோம்.

ஆகவே, நாங்கள் கேட்பது எங்கள் இனத்துவ அடையாளத்தை எங்களது தாயகத்தில் பேணிக் கொண்டு எங்களுடைய கருமங்களை நாங்களே நிர்வகிக்கக் கூடிய ஒரு கட்டமைப்பைத்தான் நாங்கள் கோரி நிற்கின்றோம்.

இந்த விடயத்தை உங்களுக்குச் சமர்ப்பித்து ஏற்கனவே மாகாண சபை விடயத்தை நீங்கள் மீளாய்வு செய்த்து போல எங்களுடைய இந்தக் கோரிக்கையையும் மீளாய்வு செய்து தீர்வுகளை வழங்க வேண்டும்.

இப்போது உங்களுக்கு இருக்கின்ற ஆட்சிப் பலம், ஆதரவு பலம், மக்கள் பலம் என எல்லாப் பலத்தையும் பயன்படுத்திக் கொண்டு மக்கள் ஆணையைப் பெற்ற நீங்கள் உங்கள் கொள்கையை மீளாய்வு செய்து தமிழ் மக்களையும் அணைத்துச் செல்லக் கூடியதாகப் பயணம் அமைய வேண்டும்.

ஆனால், தனியே சிங்களத் தேசியம் அல்லது நாட்டுத் தேசியம் என்று சொல்லி எங்களை அதற்குள் முடக்கிவிட நினைப்பது பொருத்தமானதல்ல.

அவ்வாறு சிங்களத் தேசியத்துக்குள் கரைந்து போக எங்களுக்கு எப்போதும் உடன்பாடில்லை. ஆகவே, எங்களுடைய இனத்துவ அடையாளங்களைப் பாதுகாத்துக்கொள்ளக்கூடிய நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும் என்று கட்சி சார்பில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்” என தெரிவித்துள்ளார்.

Comments are closed.