சமகாலத்தில் மூன்றாம் உலக போர் ஏற்படும் என்ற பெரும் அச்சத்தை இஸ்ரேல் – ஈரான் முறுகல் நிலைமை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வருடம் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது மேற்கொண்ட வான்வழி தாக்குதல் மற்றும் நாட்டுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினரால் போர் ஆரம்பமானது.
இந்தத் தாக்குதல் கடந்த 2023 ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
அன்றைய நாளில் இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலில் இசை கச்சேரியில் பங்கேற்க வந்த இஸ்ரேல் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். சிலர் கொல்லப்பட்ட நிலையில், வெளிநாட்டு பிரஜைகள் உட்பட நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாகவும் ஹமாஸ் அமைப்பு சிறை பிடித்துச்சென்றது.
இந்த தாக்குதலின் போது இஸ்ரேலிய பெண்களில் சிலர் பலாத்காரம் செய்யப்பட்ட செய்திகளும், ஆடையற்ற நிலையில் பெண்களை வாகனத்தில் இழுத்து செல்லப்பட்ட காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த தாக்குதல் இஸ்ரேலை மட்டுமன்றி, அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானிய என பல நாடுகளை கடும் கோபம் அடையச் செய்தன. ஏனெனில் அந்நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளையும் ஹமாஸ் கடத்திச் சென்றிருந்தது.
இந்நிலையில் ஹமாஸ் அமைப்பை முற்றாக ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் மேற்கொண்டார்.
உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல், ஹமாஸ் மீது தாக்குதலை ஆரம்பித்தது.
எனினும் சமாதான நிலையை ஏற்படுத்தி பயண கைதிகளை மீட்க முயற்சிக்கப்பட்ட போதும், அதற்கு இஸ்ரேல் இணக்கம் தெரிவிக்க மறுத்து வந்துள்ளது.
காசாவின் பல பகுதிகளில் பதுங்கியிருந்த ஹமாஸ் அமைப்பை தேடி இஸ்ரேல் படைகள் தரைவழித் தாக்குதலை தீவிரமாக மேற்கொண்டது. இதன்போது காசாவில் மக்கள் மீது கொடூர தாக்குதலை மேற்கொண்டு மக்களை படுகொலை செய்தது. இந்தத் தாக்குதல்களில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 41 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய தலைவர்களும். அடங்கும். இந்நிலையில், இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி ஓராண்டு நிறைவடைந்துள்ள சூழலில், அந்த அமைப்பிடம் இருந்து பறிமுதல் செய்த வெடிபொருட்களை உலக நாடுகளுக்கு காட்சிப்படுத்துவதற்காக இஸ்ரேல் கண்காட்சியை நடத்தியுள்ளது.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா அமைப்பும் போரில் ஈடுபட்டு இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதேபோன்று, ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர் இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரானின் ஆதரவுடன் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பையும் அழிக்கும் சபதத்தை இஸ்ரேலிய பிரதமர் எடுத்துள்ளார். இதனையடுத்து இஸ்ரேல் – ஈரான் முறுகல் நிலை தீவிரம் அடைந்துள்ளது.
இதனிடையே, இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும்,லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா குழுவும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலிடமிருந்து ஒரு நேரடி தாக்குதல் கட்டாயம் இருக்கும் என்பதினையும் அந்த தாக்குதலில் அமெரிக்காவின் பங்கும் அதிகம் இருக்கும் என்பதினையும் ஈரான் நன்கு அறிந்துள்ளது. அதற்கான விலையை ஈரான் கொடுக்க முழுமையாக தயாராகிவிட்டதாகவே கூறப்படுகின்றது.
எனினும், இந்த தாக்குதலில் பாரசீக வளைகுடாவில் இருக்கும் அமெரிக்காவின் போர் மற்றும் வணிக கப்பல்கள் முதலில் பாதிக்கப்படும் என்றும்,இதனால் மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாப்புக்கும் வணிக செயல்பாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்றும் கூறப்படுகின்றது.
இந்த போருக்கு நடுவே ஹமாஸ் உடனான போர் என்பது இஸ்ரேலுக்கு லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புடனான மோதலாக உருவானது. இந்த மோதல் தற்போது இஸ்ரேல் – ஈரான் மோதலாக உருவாகி உள்ளது.
இஸ்ரேல் நாட்டுடன் ஈரான் நேரடியாக எல்லையை பகிர்ந்துகொள்ளாத நிலையில், ஈரான் தற்போது நேரடியாக களமிறங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த ஜூலை 31 திகதி ஹமாஸ் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் டெக்ரானில் வைத்து கொல்லப்பட்டார். வான்வெளியாக வந்த ஏவுகணை தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.
இந்த தாக்குதலை இஸ்ரேல் தான் நடத்தியதாக கூறப்படுவதால் ஈரான் கடும் கோபமடைந்துள்ளதுடன், ஈரானின் புதிய ஜனாதிபதியாக மசூத் பெஜேஷ்கியானின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்றபோது இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டிருந்தார்.
இந்த போர் சூழலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கி உள்ளதால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகின்றது.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரை இஸ்ரேல் கைவிடாததால் லெபனானில் தனது ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு மூலம் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கி நடத்தி வந்தது.
இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வந்த நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பு லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் தீவிரமாக இயங்கி வருகிறது.
இதன்போது ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரூல்லா தங்கியிருந்த இடத்தை வான்வெளி தாக்குதல் மூலம் தரைமட்டமாக்கி அவரை கொலை செய்த இஸ்ரேலின் செயல் ஈரானை இன்னும் கொதிப்படைய செய்துள்ளது.
இந்த பின்னணயில் இஸ்ரேல் மீது கோபமடைந்த ஈரான் 180 முதல் 200 ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் நோக்கி ஏவி தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரானின் தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேல் சூளுரைத்துள்ளது.
இதனால் இஸ்ரேல் – ஈரான் இடையே யுத்தம் தொடங்கும் சூழல் உருவாகி உள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்கள் மீது தாக்குதல் நடத்தியும், கடந்த வாரத்தில் ஈரான் நடத்திய ராக்கெட் தாக்குதலுக்கும் இஸ்ரேல் எவ்வாறு பதிலடி கொடுக்கப்போகின்றது என்ற போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஓராண்டு நிறைவு வந்துள்ளது.
இந்த சூழலில், இஸ்ரேலை பழி தீர்க்க வேண்டும் என்ற நோக்கில், அங்குள்ள மக்களை குறிவைத்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவங்கள் இஸ்ரேலில் அச்சத்தை அதிகரித்துள்ளது. அதேவேளையில், ஹமாஸ் அமைப்பினரை பழி தீர்க்க இஸ்ரேலும் ஹமாஸ் மீது விமானத்தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
ஈரான் வீசிய ஏவுகணைகளை இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், ஜோர்டான் ஆகிய நாடுகளின் வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் தாக்கி அழித்து வரும் சூழலில், பல ஏவுகணைகள் இலக்கை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஐநா பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தை கூட்ட இஸ்ரேல் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த போர் பதற்றம் காரணமாக இஸ்ரேலினின் அண்டை நாடுகளான ஜோர்டான், ஈராக், லெபனான் என்பன தங்களது வான் பரப்பை மூடியுள்ளதாக தெரிவித்துள்ளன.
ஈரானின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. அமைப்பு மத்திய கிழக்கு நாடுகள் இடையே பெரிய அளவில் மோதல் நிகழாமல் தடுக்க இரு தரப்பும் தாக்குதலை நிறுத்த கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.