வெளிவராத முஸ்லிம் மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள்: விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

16

திருகோணமலை (Trincomalee) ஸாஹிரா கல்லூரியின் 70 மாணவிகளின் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படாமல் இருப்பதானது மாபெரும் அநீதியாகும் என முன்னாள் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம் .எம். மஹ்தி தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (05) ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், “முஸ்லீம்களான மாணவிகள் தங்களுடைய கலாச்சார ஆடையான பர்தாவை அணிந்து பரீட்சை மண்டபத்திற்கு சென்றதற்காக மேற்பார்வையாளர்களால் பல அசௌகரியங்களுக்கு உட்படுத்தப்பட்டது மாத்திரமன்றி தற்போது பெறுபேறுகளும் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

இதன் மூலம் அம் மாணவிகள் பாரிய மன உளைச்சல்களுக்கு உட்பட்டது மாத்திரமன்றி அவர்களுக்கான ஆடை சுதந்திரமும் மறுக்கப்பட்டுள்ளதுடன் பரீட்சார்த்திகள் ஏதேனும் முரண்பாடாக நடந்து கொண்டால் மேற்பார்வையாளர்கள் உடனடியாக அதற்கான நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும்.

அல்லது மாணவர்களை வெளியேற்றி இருக்க வேண்டும், ஆனால் மாறாக பரீட்சையை எழுதுவதற்கு அனுமதித்து விட்டு இவ்வாறு பழிவாங்கியிருப்பதானது ஒரு வகை இனரீதியான வெறுப்புணர்வின் வெளிப்பாடாகும்.

இந்த சம்பவம் குறித்து பல அரசியல் தலைமைத்துவங்கள் அமைச்சரிடமும் பரீட்சை ஆணையாளரிடமும் முறையிட்டதன் பிரகாரம் எதிர்வரும் ஏழாம் திகதி அளவில் பெறுபேறுகள் கிடைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தவறும் பட்சத்தில் அம் மாணவர்களுக்கான நீதியை பெற்றுக் கொடுப்பதற்காக மாணவர்களையும் பொது மக்களையும் இணைத்து பல போராட்டங்களை நடத்துவதோடு நீதிமன்றில் வழக்கும் தொடரப்படும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.