தமிழ் மக்களின் கூட்டு முயற்சி வெற்றியளித்துள்ளது : ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் சுட்டிக்காட்டு

8

தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வை ஜனாதிபதியாக தெரிவு செய்கின்றவர் வழங்க வேண்டும் என்பதை கூறுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சி வெற்றி அளித்திருக்கின்றது என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளரும் ஊடக பேச்சாளருமான க. துளசி தெரிவித்துள்ளார்.

தமிழ் பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளருக்கு கிடைத்த வாக்கு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “கடந்த தேர்தல்களில் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்ததன் மூலம் தமிழ் மக்கள் எதனையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதை பறைசாற்றுவதோடு தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தர தீர்வை ஜனாதிபதியாக தெரிவு செய்கின்றவர் வழங்க வேண்டும் என்பதை கூறுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சி வெற்றி அளித்திருக்கின்றது.

தமிழ் தேசிய வெற்றிக்காக ஒன்றுதிரள வேண்டும் என்பதை வெளிப்படுத்துவதற்கு தமிழ் மக்கள் ஒரு குறுகிய நாளில் ஒன்று திரண்டு சங்கு சின்னத்துக்கு வாக்களித்ததன் மூலமாக தமிழ் தேசியத்தின் ஒற்றுமையை அவர்கள் வலியுறுத்துகின்றார்கள்.

மக்கள் சங்கிற்கு பெருவாரியாக வாக்களித்ததன் மூலம் தமிழ் அரசியல் களத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்பதை இடித்துரைத்துள்ளனர்.

ஒற்றுமையாக தேசியத்திற்காக செயற்படும்போது போராளிகள் ஆகிய நாங்களும் இங்கு இருந்தும் புலம்பெயர் தேசத்தில் இருந்தும் அவர்களுக்கான ஆதரவை வழங்கி வெற்றிக்காக உழைப்போம்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல்களிலும் அனைத்து தேர்தல்களிலும் இதே கூட்டணி ஒன்றுபட்டு செயல்படும்.

இதேபோல் தமிழ் தேசியத்தை சிதைவடையச் செய்து வெளியேறியவர்களும் ஒன்றாகி மீளவும் பலமான ஒரு கட்டமைப்பை உருவாக்கி எங்கள் தேசியத்தை வெளிப்படுத்த வேண்டும்.

சிங்கள தேசம் அப்போதெல்லாம் சிங்கள தேசியத்தை பெருவாரியாக வெளிப்படுத்தி இருக்கின்றதோ அப்போதெல்லாம் தமிழ் தேசியமும் பலம் அடைந்து உச்சம் பெற்று இருக்கின்றது.

இந்த நிலையில் புதிய ஜனாதிபதிக்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு தமிழ் தேசிய இனத்தினுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையும் கோரி நிற்கின்றோம்.“ என தெரிவித்தார்.

Comments are closed.