ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்காக 200 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் பேருந்துகளுக்காக செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
பேருந்துகள் மூலம் சுமார் 100 கோடி ரூபாய் இலாபம் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் நிறைவடையவுள்ள இன்றைய தினம் நடைபெறும் கடைசி பொதுக் கூட்டங்களுக்காக ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் குழுவினால் சுமார் 1500 பேருந்துகள் கோரப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தி கட்சியினால் அதிகூடிய பேருந்துகள் பெறப்பட்டுள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை முழுவதும் தேர்தல் கடமைகளுக்காக சுமார் 500 பேருந்துகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 20ஆம் திகதி நாடு முழுவதும் 50 சதவீத பேருந்துகள் பணியில் ஈடுபடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் நடைபெறும் 21ஆம் திகதி 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை பேருந்துகளை செயற்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்றைய தினம் தொலைதூர சேவை பேருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் என தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Comments are closed.