கொழும்பில் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ள விசேட போக்குவரத்து ஏற்பாடு

7

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர்களின் இறுதிப் பொதுக்கூட்டங்களை சுமூகமாக நடத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளை இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பேரணிகள் காரணமாக சில வீதிகள் குறிப்பிடத்தக்க போக்குவரத்து இடையூறுகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது:

அந்தவகையில் கொழும்பு மாவட்ட கிராண்ட்பாஸில் சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் இறுதிப் பேரணி காரணமாக கிராண்ட்பாஸ் பகுதியைச் சுற்றியுள்ள வீதிகளில் கடும் நெரிசல் ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மருதானையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரான சஜித் பிரேமதாச தனது இறுதிப் பேரணியை நடத்துவதால் மருதானையைச் சுற்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

நுகேகொடயில் தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமார திஸாநாயக்கவின் இறுதிப் பேரணி நுகேகொட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெறவுள்ளது.

பிலியந்தலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் இறுதிக் கூட்டத்தில் பிலியந்தலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகள் பாதிக்கப்படும்.

எனவே, பொதுமக்கள் தங்கள் பயண வழிகளை அதற்கேற்ப திட்டமிட்டு, முடிந்தவரையில் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Comments are closed.