இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்காது கட்சியை பெயரளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேறுமாறு ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தக் கோரிக்கையை பரிசீலித்ததன் அடிப்படையிலேயே நேற்று (05) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் 4 இராஜாங்க அமைச்சர்களை பதவியில் இருந்து வெளியேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹொன் பிரியதர்ஷன டி சில்வா, நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு ஆதரவான அமைச்சர்கள் உள்ளிட்ட பல கட்சி அமைப்புக்களின் கோரிக்கையை கருத்திற்கொண்டே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதிக்கு ஆதரவளிக்காத அமைச்சர்களை தற்போதைக்கு அரசாங்கம் என்ற பெயரில் வைத்துக்கொண்டு எந்த பயனும் இல்லை எனவும் தேர்தல் தொடர்பில் எடுக்கும் தீர்மானங்களை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கி அரசியல் சூதாட்டத்தில் ஈடுபடுவதாகவும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, முக்கியமான தருணத்தில் ஆதரவளிக்காதவர்களை நீக்கி, சுதந்திரமாக ஜனாதிபதித் தேர்தலைத் தொடர சந்தர்ப்பம் வழங்குமாறு, இந்தக் குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் சில அரச அதிகாரிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு எச்சரிக்கை அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதித் தேர்தல் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள இந்த தருணத்தில் அரசாங்கம் தயங்காமல் தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதன்படி பல இராஜாங்க அமைச்சர்கள் தமது பதவிகளில் இருந்து நீக்கப்படாமல், அதற்குப் பதிலாக இந்த அறிவிப்பின் பிரகாரம் பதவி விலகுவதற்கான வாய்ப்பை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Comments are closed.