கிளிநொச்சி (Kilinochchi) மத்திய பேரூந்து நிலையத்தில் நடைபெற்று வரும் மோசடிகள் தொடர்பில் சமூக ஆர்வலர் ஒருவர் கேள்வியெழுப்பி உள்ளார்.
மத்திய பேரூந்து நிலையத்தில் இயங்கிவரும் சிற்றுண்டிச் சாலையின் செயற்பாடுகள் தொடர்பில் பல சந்தேகங்கள் எழுவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முறைகேடான வழியில் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதோ எனவும் அவர் தன் சந்தேகத்தினை வெளிப்படுத்துவதையும் அவதானிக்கலாம்.
தன்னுடைய கேள்விகளுக்கான பதில்களை தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவலறிந்து கொள்ள முயலும் அவர் அதற்கான கோரிக்கையை ஊழலுக்கு எதிரான பிரஜைகள் புலனக்குழு நிர்வாகிகளிடம் கோரியிருக்கின்றார்.
வடமாகாணத்தில் சமூக ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டு இயங்கும் புலனக்குழுவாக ஊழலுக்கு எதிரான பிரஜைகள் புலனக் குழு இருக்கின்றது.
வடக்கில் நடைபெற்றுவரும் ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பில் தொடர்ந்து விவாதிப்புக்கள் நடைபெற்று வருவதோடு பல விடயங்களுக்கான தீர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இன்னும் சில விடயங்களை அணுகும் வழிமுறைகளை சொல்லிக் கொடுக்கின்றது. ஊழலுக்கு எதிராக முடிந்தளவுக்கு பொறுப்புணர்வோடு போராடி வருவதாகவே இந்த புலனக்குழுவை நோக்க வேண்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது பாராட்டத்தக்க முயற்சியாகவே இருப்பதோடு இன்னும் பல புதிய உத்திகளை இதன் இயக்குநர்கள் கையாள முயற்சிக்க வேண்டும்.
கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெறும் மோசடிகள் தொடர்பில் அறிந்து கொள்ள தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் கிடைக்கும் பதிலளிப்புக்களை அடிப்படையாக கொள்ள முயற்சிக்கின்றார்.
அவரது கோரிக்கைகள் பின்வருமாறு அமைந்துள்ளன.
கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சிற்றுண்டிச்சாலை தொடர்பாக பின்வரும் விடயங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி தந்துதவவும்.
1- கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சிற்றுண்டிச்சாலை என்ன அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது?
2- எத்தனை வருடம் குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது?
3- ஒரு வருட குத்தகை என்று பத்திரிகை விளம்பரம் செய்யப்பட்ட சிற்றுண்டிச்சாலை எவ்வாறான அனுமதி அடிப்படையில் இரண்டு வருடமாக மாற்றப்பட்டது? அவ் அனுமதி பற்றி தந்துதவவும்?
4- மோசடி நடைபெற்றதாக குத்தகை உடன்படிக்கை இடை நிறுத்தம் செய்து போக்குவரத்து அதிகாரசபை பொது முகாமையாளர் அவர்களால் நிறுத்தப்பட்ட சிற்றுண்டிச்சாலை இப்போது எவ்வாறு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது?
5- இடை நிறுத்தம் செய்தால், ஏன் அத்து மீறி நடத்தும் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை?
6- சிற்றுண்டிச்சாலைக்கு ஒதுக்கப்பட்ட கட்டடம் தவிர்ந்த பேருந்து நிலைய வளாகம், சிற்றுண்டிச்சாலைக்கு முன் உள்ள பிரதேசம் என்பன எவ்வாறு பாவிக்க அனுமதி வழங்க பட்டுள்ளது?
7- இச் சிற்றுண்டிச்சாலை அனுமதி முறைகேடாக வழங்கிய அலுவலருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன?
8- புகைத்தல் பொருட்கள் சிற்றுண்டிச்சாலையில் விற்க, போக்குவரத்து அதிகாரசபை அனுமதி வழங்கி உள்ளதா?
9- போக்குவரத்து அதிகாரசபை உதவி பொது முகாமையாளர் மேற்கொண்ட இப் பெரிய ஊழல் தொடர்பாக இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
10- அத்து மீறி அமைக்கப்பட்ட கொட்டகைகள் ஏன் அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை?
மேற்குறிப்பிட்ட பத்து கேள்விகள் உள்ளடங்கலாக சமூக ஆர்வலர் தன்னுடைய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
Comments are closed.