சஜித்தை (Sajith Premadasa) ஆதரிக்கும் நிலைப்பாட்டை அறிவித்த தமிழரசுக் கட்சியின் தீர்மானத்திற்கான எதிர்ப்புக்கள் வரும் நாட்களில் வலுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லண்டனில் இருந்து கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினரான சி.சிறீதரன் (S. Sridharan) முன்வைத்த கருத்தின் பின்னணியிலேயே இந்த எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
இந்த தீர்மானம் சுமந்திரன் (M. A. Sumanthiran) அணியின் தீர்மானம் என அரசியல் நிலைப்பாடுகளை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்து வந்த வேளையில், மாவையும் கட்சியின் தீர்மானத்தை முன்னின்று ஒற்றுமையாக செயற்படுத்துவோம் என அறிவித்துள்ளார்.
எனினும் இது பொதுச்சபையின் தீர்மானம் அல்ல எனவும் மத்திய குழுவால் சுமந்திரன் தமக்கு ஆதரவானவர்களை வைத்து நிலைப்பாட்டை அறிவித்துள்ளதாகவும் சில தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர்.
தமிழர்களின் எதிர்பார்ப்புக்களை சிதறடிக்க, ரணிலோ (Ranil Wickremesinghe), சஜித்தோ, அனுரவோ (Anura Kumara Dissanayake) அல்லது நாமல் ராஜபக்சவோ (Namal Rajapaksa) தேவையில்லை, தமிழ் எம்பிக்களே போதும் என சில சமூகவியலாளர்கள் கருத்துக்களும் எதிரொலிக்கிறது.
இதன் தாக்கம் தமிழ் சிவில் சமூகமாக அனைவரும் முடிவு எடுத்த பொது வேட்பாளர் என்ற முயற்சிக்கு ஒரு முட்டுக்கட்டையிடப்பட்டுள்ளது என்றே கூறவேண்டும்.
சஜித் மீதான ஆதரவு முடிவை தமிழரசுக்கட்சி ஒற்றுமையாக நின்று எடுத்திருந்தால் கட்சியையும் அதன் ஒற்றுமையையும் பிரதிபலிப்பதோடு, மக்களின் வரவேட்பையும் பெற்றிருக்கும்.
ஆனால் கட்சியின் தலைவர் ஒன்றினை கூறுகின்றார், சிறீதரன் வேறுவிதமாக கூறுகிறார், சுமந்திரன் நிலைப்பாட்டை அறிவிக்கின்றார், கே.வி.தவராசா எதிர்க்கின்றார்.
இவற்றை பார்க்கும்போது தமிழரசுக் கட்சி பிளவு கொண்டுள்ளதா என கேள்வி எழுகிறது? ஒற்றையாட்சியை தனது பிரகடனத்தில் முன் வைத்துள்ள சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு தமிழரசு கட்சி கோரியுள்ளது.
சஜித் மாத்திரமல்லாது பிரதான வேட்பாளர்களான ரணில் , அநுர மற்றும் நாமல் ஆகியோரின் அரசியல் நகர்வென்பது ஒற்றையாட்சியின் போக்கு.
சஜித்தின் ஆதரவை உற்றுநோக்கும் தென்னிலங்கை: சிங்கள மக்களுக்கு சுமந்திரனின் முக்கிய செய்தி | Tamil Raj Party Supporting Sajith
இந்த நிலையில் தமிழரசு கட்சியினர் , அவசரமாக கூடி சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்க முன்வந்துள்ளமை, சுயநிர்ணய உரிமை வேண்டும், தமிழர் தாயகத்திற்கு சுதந்திரம் வேண்டும் என உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கட்டமைப்புக்கு சவாலை உருவாக்கியுள்ளது.
இந்த நிலைப்பாட்டை சஜித் தரப்பின் தென்னிலங்கை ஆதரவாளர்கள் வரவேற்றாலும், சில முக்கிய எம்பிக்கள் இதனை ஏற்க மறுக்கின்றனர். தென்னிலங்கையின் வாக்குபலத்தை அதிகரிக்க சிறந்த வாய்ப்பு என்கின்றனர்.
இதனடிப்படையில் தமிழரசு கட்சியின் நிலைப்பாட்டின் மூலம், எம்.ஏ.சுமந்திரன் மக்களை குழப்பும் தீர்மானங்களையே எடுப்பார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சாடியுள்ளார்.
இதை அடிப்படையாக வைத்த சுசிலின் கருத்து பின்வருமாறு அமைந்திருந்தது… ”ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மக்களை குழப்பும் தீர்மானங்களையே எடுப்பார்.
அவர் தற்போது அறிவித்துள்ள தீர்மானம் தெற்கு மக்களுக்கு சிறந்த செய்தியாகும். சுமந்திரன் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தனது நிலைப்பாட்டுடன் வேறு குழுவுடனேயே செயற்பட்டு வந்தார்.
எனவே சுமந்திரன் ஏதேனுமொரு குழுவைத் தெரிவு செய்கின்றார் எனில், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெற்கு மக்கள் சிந்திக்க வேண்டும்.
சுமந்திரனின் தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏற்றுக் கொள்ளவில்லை. இது மக்களை குழப்பும் செயற்பாடாகும். ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சுமந்திரனே மக்களை குழப்பிக் கொண்டிருந்தார்.
எனவே அவரது தீர்மானங்கள் தொடர்பில் வடக்கு மக்கள் மாத்திரமல்ல, தெற்கு மக்களும் அவதானத்துடன் இருக்க வேண்டும். சுமந்திரன் ஏதேனுமொரு தீர்மானத்தை எடுப்பாரானால் அது தெற்கு மக்களுக்கு சிறந்த செய்தியாகும்” என்றார்.
Comments are closed.