நாடு பொருளாதார ரீதியில் சிக்கித் தவித்த போது மக்களை மூச்சுவிட வைத்த தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ். தனியார் விருந்தினர் விடுதியில் (27.08.2024) இடம்பெற்ற இளைஞர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கிறேன். அதற்கான காரணம் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு பொருளாதார ரீதியில் சரிந்து நின்ற போது நாட்டை பொறுப்பெடுத்தார். மக்கள் வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்து மூச்சு விடக்கூடிய நிலையை ஏற்படுத்தினார்.
அவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாக்கும் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். ஏனெனில் அடுத்த தடவை அவரால் தேர்தலில் நிற்க முடியாத சூழல் ஏற்படும்.
ஏனெனில் அவரது வயது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்புக்களை வழங்காத நிலையில் அந்தக் காலத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கலாம் என பின்னர் சிந்திக்கக் கூடாது.
தமிழ் மக்களுக்கு தீர்க்கப்படாத பிரச்சினையாக அரசியல் பொருளாதாரம் பிரச்சனைகள் இருக்கின்ற நிலையில், அதனை தீர்க்கும் தலைவர் ஒருவரை ஜனாதிபதியாக்குவதே தமிழ் மக்கள் பேரம் பேசுவதற்கு சாதகமாக அமையும்.
தற்போது பொது வேட்பாளர் என தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் பெறுபேறுகள் எதிர்கால அரசியலை தீர்மானிக்கும்.
நாங்கள் மக்களின் பொருளாதார அபிவிருத்தியை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு 25 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச தொழில் கல்வியை வழங்கி வருகிறோம்.
அவர்கள் தாய் நாட்டில் இருந்து கொண்டு தொழில் செய்வதற்கான வேலைத்திட்டத்தினையை மேற்கொண்டு வருகின்றோம்.
ஏனெனில் தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் இருந்து இளைஞர்கள் யுவதிகள் நாட்டை விட்டு வெளியேறி வரும் நிலையில் அவர்களின் வெளியேற்றத்தை தடுக்காமல் தமிழீழத்தை பெற்று பயன் கிடைக்காது.
ஆகவே, இளைஞர் யுவதிகள் தமது எதிர்கால அபிவிருத்தி மற்றும் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு ஏற்ற தலைமைத்துவத்தை சரியான முறையில் தெரிவு செய்வது காலத்தின் தேவை” என கூறியுள்ளார்.
Comments are closed.