எரிபொருள், எரிவாயு, மின்சாரம் இன்றி மக்கள் தவிக்கும் போது சஜித் பிரேமதாச (Sajith Premadasa) மற்றும் அனுர குமார திஸாநாயக்க (Anura Dissanayake) ஆகியோர் எங்கே ஓடி ஒழிந்தார்கள் எனவும் அவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) சவால் விடுத்துள்ளார்.
அனுராதபுரம் (Anuradhapura) சல்காடு விளையாட்டரங்கில் நேற்று (17) ஆரம்பமான “இயலும் சிறிலங்கா” பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் கருத்து தெரவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரம் ஆகிய பிரச்சினைகளுக்கு தாம் வெற்றிகரமாக தீர்வுகளை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, “இயலும் சிறிலங்கா” தேர்தல் பிரச்சாரமானது தேசத்தைப் பிளவுபடுத்தும் களம் அல்ல என்றும், நாட்டைப் பாதுகாப்பதற்காக அனைத்து இலங்கையர்களும் ஒன்றுபடும் இயக்கம் என்றும் ஜனாதிபதி தெளிவுப்படுத்தியுள்ளா்.
இந்நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியவர்கள் சஜித் பிரேமதாசவோ, அனுரவோ, ஹர்ஷ டி சில்வாவோ, சுனில் ஹந்துன்நெத்தியோ அல்ல என்று தெரிவித்த ஜனாதிபதி, தமது அரசாங்கம் போதியளவு உரங்களை வழங்கிய போது, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வெற்றிகரமான அறுவடையை வழங்கிய விவசாயிகளே என நினைவு கூர்ந்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், அனுர குமார திஸாநாயக்கவும் இன்று மேடைகளில் மக்களின் இன்னல்களைப் பற்றி பேசுவது வேடிக்கையாகவுள்ளது எனவும், உண்மையில் மக்கள் படும் துன்பம் அவர்களுக்குத் தெரிந்திருந்தால் அன்று ஆட்சி அதிகாரத்தைப் பெற்று, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கியிருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார்.
மேலும், சஜித்தும், அனுரவும் ஏன் இந்த சவாலை ஏற்றுக் கொள்ளாமல் நாடும் மக்களும் பிரச்சினையில் தவிக்கும் போது ஓடினார்கள் என்பதற்கு தெளிவான பதிலை வழங்க வேண்டும் எனவும் அவ்வாறு பதில் சொல்லத் தவறினால் அவர்களை தனது மேடைக்கு வந்து இருபுறமும் உட்காரச் சொல்வேன் எனவும் ஜனாதிபதி கூறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.