வீட்டுப் பணியாளருக்கு சம்பளம் வழங்காத இலங்கை இராஜதந்திரி

10

அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகர் ஹிமாலி அருணாதிலக்க தனது வீட்டுப் பணியாளருக்கு சம்பளம் வழங்காத விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இராஜதந்திரிகள் தங்கள் உத்தியோகபூர்வ பிரதிநிதித்துவ கடமைகளுக்கு உதவுவதற்கு வீட்டு உதவியாளர்களை அழைத்துச் செல்வதற்கு, இலங்கையின் வெளியுறவு அமைச்சினால் வசதி செய்யப்படுவது வழக்கமான நடைமுறை என வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஹிமாலி அருணாதிலக்க, அவுஸ்திரேலியாவிலிருந்து, கடமை முடிந்து புறப்படுவதற்கு முன், அவருடைய ஊழியரின் சம்பளமாக அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ஊழியரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்து மூன்று வருடங்களில் இரண்டு நாட்கள் மாத்திரமே விடுமுறை வழங்கிய அருணாதிலக்க தொடர்பில் முறையாக ஆராயத் தவறியதற்காக, பிராந்திய நீதிமன்ற நீதிபதி, அவுஸ்திரேலியாவின் உள்விவகார திணைக்களத்தை கடுமையாக சாடியதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அத்துடன், அவர் தமது முன்னாள் வீட்டுப் பணியாளருக்கு 543,000 டொலர்களை சம்பளம் மற்றும் வட்டியாக செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

2015ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை கென்பராவில் பணியாற்றிய ஹிமாலி அருணதிலகா, தனது ஊழியரான பிரியங்கா தனரத்னவுக்கு அவுஸ்திரேலியாவில் இருந்த காலத்தில் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் நிபந்தனைகளை மறுத்துள்ளார்.

இதன்போது, தனரத்ன வாரத்தில் ஏழு நாட்களும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பணிபுரிந்ததாகவும், சமையல் எண்ணெயில் கையை எரித்த பிறகு இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டதாகவும் நீதிபதி எலிசபெத் ராப்பர் கண்டறிந்தார்.

இந்த காலகட்டத்தில், அவருக்கு வெறும் 11,200 டொலர் அதாவது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 75 சத டொலர் கொடுப்பனவு இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்ததாகவும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

Comments are closed.