எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தியதற்கு வடக்கு – கிழக்கு தமிழ் மக்களுக்கும் அவர்கள் சார்ந்துள்ள தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் பூரண உரிமை உண்டு என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் சமூக ஊடகம் ஒன்றில் வெளியான கருத்து தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சில ஊடகங்கள் நான் கூறிய கருத்துக்களை திரிவுபடுத்தி எனது கருத்தாக வெளியிடுவது ஊடக தர்மம் அல்ல.
நான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழ் பொது வேட்பாளரை நிராகரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. ஏனெனில் தமிழ் பொது வேட்பாளர் நியமிக்கப்பட்டமை கண்ணியமானதும் நியாயமானதுமான விடயம்.
தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு வடக்கு – கிழக்கு தமிழ் கட்சிகள் முயற்சி எடுத்தன. அது அவர்களின் உரிமை அதே நேரத்தில் வடக்கு கிழக்கில் உள்ள சில காட்சிகள் அதனை எதிர்க்கின்றன. அதுவும் அவர்களது உரிமை.
தமிழ் பொது வேட்பாளர் வடக்கு கிழக்கு சார்ந்து தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை என்பவற்றின் வெளிப்பாடாக தங்களது கோரிக்கை நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் வெளிப்படுத்துவதற்காக ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் போட்டியிடுகிறார்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் கொள்கை வெளிப்படுத்தப்பட வேண்டும். அதில் எனக்கு மாற்று கருத்துக்கு இடமில்லை. ஆனால், பொது வேட்பாளர் என்ற கோஷத்தை வடக்கு கிழக்குக்கு வெளியில் கொண்டு வராதீர்கள் என கூறியது உண்மை.
ஏனெனில், அதற்கு நியாயமான காரணம் உண்டு. தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு வடக்கு, கிழக்கு சார்ந்து கோரிக்கைகளை முன்வைத்து தமது அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அவர்களது கோரிக்கை வடக்கு கிழக்குக்கு உள்ளே பேசப்படுவது நியாயமானது எனக் கூறினேன் தவிர வேறு எந்த ஒரு அர்த்தத்திலும் பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து தெரிவிக்கவில்லை.
சில ஊடகங்கள் எனது கருத்தை திரிவுபடுத்தி தமக்கு ஏற்ற வகையில் மாற்றி எனது கருத்தாக கூறுவது ஊடக தர்மம் அல்ல.
ஆகவே, தமிழ் பொது வேட்பாளர் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அவை சார்ந்த தமிழ் கட்சிகள் எடுக்கும் முடிவுகளில் நான் தலையிட போவது இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
Comments are closed.