வவுனியா பாடசாலை ஒன்றில் சரஸ்வதி மற்றும் மாதா சிலை அமைக்க எடுத்த முயற்சியால் குழப்பநிலை

11

வவுனியா (Vavuniya)- கோமரசன்குளம் பகுதி பாடசாலை ஒன்றில் இந்து வணக்க சிலை வைப்பதற்கு அனுமதிக்க முடியாது என பாடசாலை அபிவிருத்தி சங்கம் தெரிவித்தமையால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா – கோமரசன்குளம் மகாவித்தியாலயத்தில் அதிகமாக இந்து மாணவர்கள் கல்வி கற்று வருவதுடன், குறித்த பாடசாலை காணப்படும் அயலில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பாடசாலையில் இந்து மற்றும் கிறிஸ்தவம் என்பவற்றுக்கான காலை பிரார்த்தனை வழிபாட்டிடங்கள் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக காணப்பட்டு வருவதுடன் அதில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த இந்து வழிபாட்டு படங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன.

இதன் காரணமாக, பாடசாலையின் பழைய மாணவர்கள் இந்து மாணவர்களின் வழிபாட்டிற்காக சரஸ்வதி சிலை ஒன்றினை வைப்பதற்கும் கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாதா சிலை ஒன்று வைப்பதற்கும் தீர்மானித்திருந்தனர்.

இருப்பினும்,இந்த பாடசாலையில் மத சிலையை வைக்க கூடாது எனவும் இது கிறிஸ்தவ, இந்து மதங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்தும் எனக் கூறி அப் பகுதி மதபோதகர் உட்பட சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பில் அப்பகுதி மத போதகரால் கடிதம் ஒன்றும் பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இந்து சிலை அமைக்க அனுமதி வழங்க மறுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் வவுனியா தெற்கு வலயத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பழைய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாடசாலையில் இரு மத சிலைகளும் வைப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் இந்து பிள்ளைகள் அதிகமாக கற்கும் பாடசாலையில் வழிபாட்டு உரிமை இல்லையா எனவும் பழைய மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக மதபோதகர் ஒருவரை தொடர்பு கொண்டு வினவியபோது, இந்த விடயம் குறித்து தான் கேள்விப்பட்டதாகவும் கடிதம் கொடுத்தமை குறித்து அசமந்த போக்காக பதிலளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.