ஜனாதிபதி தேர்தலின் போது பொலிஸ் மா அதிபர் சார்பாக தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடமிருந்து தமக்கு உத்தியோகபூர்வ தகவல் கிடைத்துள்ளதாகவும், தேர்தலை நடத்துவதற்காக பொலிஸ் மா அதிபரின் அனைத்துக் கடமைகளையும் தன்னால் செய்ய முடியும் என்பதை தாம் உறுதிப்படுத்தியதாகவும் குணதிலக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, தேர்தல் காலத்தில் பொலிஸ் மா அதிபரினால் பிறப்பிக்கப்பட்ட அனைத்து பொலிஸ் உத்தரவுகளும், தேர்தல் தொடர்பான கடமைகளுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்களை ஈடுபடுத்துதல், தேர்தல் கூட்டங்களுக்கான ஏற்பாடுகள், தளவாட தேவைகளை வழங்குதல் போன்ற ஏற்பாடுகள் ஆகியவை தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தேர்தல் தொடர்பான தேவைகள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து தமக்கு தெரிவிக்குமாறு அனைத்து சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கும் தாம் அறிவித்துள்ளதாக குணதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.