பலாலியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை : யாழில் ஜனாதிபதி அறிவிப்பு

6

நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) வழங்கி வருகின்ற ஆதரவு மகத்தானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழ் மாவட்டத்தின் பலாலியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவுள்ளோம் எனவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். அலுவலகத்திற்கு இன்று (03) விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில், அங்கு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி “அதலபாதாழத்தில் வீழ்ந்து கிடந்த எமது நாட்டை கட்டியெழுப்பும் முயற்சியில் நான் இறங்கியபோது எனக்கு பெரும் பக்கபலமாகவும் உறுதுணையாகவும் இருந்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

அதுமட்டுமல்லாது இந்த நாட்டின் கடற்றொழில் அமைச்சராக இருந்து நாட்டின் பொருளாதார ஈட்டலுக்கு மட்டுமல்லாது கடற்றொழில் மக்களுக்கு குறிப்பாக வடபகுதி மக்களுக்கான சிறந்த சேவையையும் ஆற்றிவருகின்றார்.

இதேவேளை யாழ் மாவட்டத்தை ”யாழ் நதி” திட்டத்தின் ஊடாக பொருளாதாரத்தை பலப்படுத்த எதிர்பார்க்கிறோம். அத்துடன் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இந்தியாவுடன் கலந்தாலோசிக்கிறோம்.

சீமெந்து நிறுவனம் இருந்த இடத்தில் முதலீட்டு வலயமொன்று ஆரம்பிக்கப்படும். பூநகரியிலும் அதனை செய்வோம். பலாலியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவோம்.

காற்று, சூரிய சக்தி மூலம் பெருமளவில் இங்கு மின் உற்பத்தி செய்ய முடியும். அதனால் மேலும் பல பொருளாதார நன்மைகள் கிடைக்கும். அத்துடன் எதிர்வரும் 10 வருடங்களுக்குள் யாழ்ப்பாணம் அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக மாற்றப்படும்.

எனவே நாம் அடுத்தபடியாக பொருளாதார யுத்தத்தை எதிர்கொள்ள ஆரம்பிப்போம். அதற்கான பணிகளை நாம் முன்னெடுக்க வேண்டும். அதற்கான முழுமையான ஒத்துழைப்பும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக வடக்கின் மக்களிடம் இருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்” என தெரிவித்திருந்தார்.

Comments are closed.