குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் முதற்கட்ட நிவாரணங்களை பெறத் தகுதியுடைய 18 இலட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளில் இரண்டு இலட்சம் பேர் இதுவரை வங்கிக் கணக்கை திறக்காததுடன் தேசிய அடையாள அட்டையிலும் பிரச்சினை உள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அஸ்வெசும இரண்டாம் கட்ட விசாரணையின் கீழ் புதிதாக விண்ணப்பித்தவர்களின் தகவல், சனத்தொகை கணக்கெடுப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படவுள்ளது.
முதற்கட்டப் பயனாளிகளில் 135,000 பேர் இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்கவில்லை எனவும், எஞ்சிய பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை தொடர்பான பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு பல முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வங்கிக் கணக்கு தொடங்காமல் இருப்பதும், அதிகாரிகள் சரியான தகவல்களை தெரிவிக்காமையினாலும், வங்கிக் கணக்குகளில் சிக்கல் உள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும் சில பயனாளிகளின் தேசிய அடையாள அட்டை இலக்கங்களை சரிபார்த்த போது அதே இலக்கத்தில் மேலும் ஒருவர் இருப்பதன் காரணமாக நிவாரணங்களை வழங்க முடியாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அஸ்வெசும இரண்டாம் கட்டத்துக்காக 455,697 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதில் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் இருந்து அதிகளவான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அஸ்வெசும இரண்டாம் கட்டத்தில் பயனைப் பெற்றுப் பெற்றுக் கொள்வதற்காக 4 இலட்சத்து 55 697 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றை மீளாய்வு செய்யும் பணிகளை இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுவதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.