இந்தியாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்களவை முதல் கூட்டத் தொடரில் பாரதிய ஜனதாக்கட்சிக்கும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகளுக்கும் இடையில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எதிர்க்கட்சி தலைவரும் காங்கிஸின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்ச்சித்த நிலையிலேயே இந்த வாதப்பிரதிவாதங்கள் தீவிரமாகியுள்ளன.
பிரதமர் மோடி பரமாத்மாவுடன் கூட பேசுவார்.ஆனால் மணிப்பூர் மக்களுடன் பேச மாட்டார் என இதன்போது ராகுல் காந்தி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
மணிப்பூரில் கடந்த பல மாதங்களாக வன்முறைகள் இடம்பெற்ற போதும் பிரதமர் மோடி அங்கு செல்லாமை மற்றும் அந்த பிரச்சினையை தீர்க்காமை என்பவற்றை மையப்படுத்தியே இந்த விமர்சனத்தை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, தமக்கு கடவுளுடன் நேரடி தொடர்பு இருப்பதாக கூறுகிறார். அவர் நேரடியாகவே பரமாத்மாவுடன் பேசுவார். பரமாத்மாவும் நேரடியாகவே மோடியின் ஆன்மாவோடு பேசுவார்.
இந்தநிலையில் தாம் உட்பட்ட எல்லோரும் உயிரில் ரீதியாக பிறப்போம், மரணத்தை தழுவுவோம். ஆனால் பிரதமர் அப்படிப்பட்டவர் அல்லர்.
அவர் பரமாத்மாவிடம் கேட்டு தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தாரா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது, குறுக்கிட்ட பிரதமர் நரேந்திர மோடி, “ராகுல் காந்தி இந்துக்களை வன்முறையாளர்கள் போல சித்தரிக்க முயலுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
எனினும், அதனை மறுத்த ராகுல் காந்தி, மோடி இந்தியாவின் பிரதமர் மட்டுமே. அவர் இந்துக்களின் பிரதிநிதி அல்ல, உண்மையான இந்துக்கள் வெறுப்புணர்வை தூண்ட மாட்டார்கள் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.