மித்தெனிய படுகொலைக்கு காரணமாகிய கஞ்சா பொதி!

0 3

சமீபத்தில், நாட்டில் மிகவும் சர்ச்சைக்குரிய செய்தியாக மாறியிருந்த மித்தெனிய கொலை சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் கஜ்ஜா எனப்படும் அனுர விதனகமகே மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் மித்தெனியவில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கான காரணம் பாக்கோ சமனின் கஞ்சா பொதியானது கஜ்ஜாவினால் கடத்தப்பட்மை என  பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், தனது அதிக கடன் காரணமாக பாக்கோ சமனின் ஒப்பந்தத்தின் பேரில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி, மித்தெனிய பகுதியில் தனது இரண்டு குழந்தைகளுடன் கஜ்ஜா மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அடையாளம் தெரியாத ஒரு துப்பாக்கிதாரியால் சுடப்பட்டார்.

இதில் கஜ்ஜாவும் அவரது இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர். அதன்படி, தென் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிரி ஜெயலத்தின் அறிவுறுத்தலின் பேரில் நடத்தப்பட்ட விசாரணைகளில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட மூன்று பேர் மற்றும் கொலைக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த ஒரு பெண் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்திய நபரிடம் மேலும் விசாரணை நடத்தியபோது, பெப்ரவரி 10, 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் துபாயில் பாக்கோ சமனின் அறிவுறுத்தலின் பேரில் கஜ்ஜாவைக் கொல்ல முயன்றதாகவும், ஆனால் தோல்வியடைந்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், பிப்ரவரி 18 ஆம் திகதி துபாயில் மறைந்திருக்கும் லஹிரு நமட்டாவின் ஆலோசனையின் பேரில் கஜ்ஜாவைக் கொல்ல ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநருடன் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

லஹிரு நமட்டா மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை தொலைபேசியில் வழிநடத்தியதாகவும், கஜ்ஜா வரும் வரை, கொலை நடந்த இடத்திற்கு அருகில் கட்டுமானத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் அருகே காத்திருந்ததாகவும் துப்பாக்கிதாரி கூறியுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், அந்த இடத்திலிருந்து செல்லும்போது நேருக்கு நேர் அவரை சந்தித்த கஜ்ஜா, தனது இரண்டு குழந்தைகளுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணிப்பதைக் கண்டு, மோட்டார் சைக்கிளைத் திருப்பி அவர்களைத் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறியுள்ளார்.

அந்த நேரத்தில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இரண்டு குழந்தைகளைப் பார்த்ததும் சுட முடியாது என்று கூறியாதாகவும், ஆனால் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் வற்புறுத்தலின் பேரில் அவர் அவ்வாறு செய்ததாகவுமம் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இதற்கிடையில், கொல்லப்பட்ட கஜ்ஜா, பொலிஸ் அதிகாரியாக நடித்துக்கொண்டு, பாக்கோ சமனுக்குச் சொந்தமான கஞ்சா பொதியை திருடியதற்காகக் கொல்லப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கஜ்ஜா பொலிஸார் போல வேடமிட்டு சூதாட்டக் கூடங்களை நடத்தி, பணத்தைத் திருடியதாக வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கொலைக்குப் பிறகு அவரது வீட்டை பொலிஸார் சோதனை செய்தபோது, கொள்ளைக்காக பயன்படுத்தப்பட்ட பல இயந்திரங்களையும் பொலிஸார் கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளனர்.

எனினும், துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் வழிநடத்திய மோட்டார் சைக்கிளில் சென்ற நபரையும், அதற்காகப் பயன்படுத்தப்பட்ட T-56 துப்பாக்கி தொடர்பிலும் பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், நேற்று(6) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்ற நிலையில் சந்தேக நபர்களை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.