அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினருக்கு அனுபவம் இல்லை என நாம் தேர்தலுக்கு முன்னரே கூறினோம், தற்போது மக்கள் அதனை நடைமுறையில் காண்கின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி முறையாக ஆட்சி செய்ய முடியாவிட்டால் மீண்டும் நாட்டை ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைத்துச் செல்லுங்கள் என்று அநுர அரசிடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில், நாமல் ராஜபக்ஷ மாத்திரமின்றி சகல எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் அச்சுறுத்தல் காணப்படுகின்றது. அவர்களுக்கு தமது நிலைப்பாட்டுக்கமைய சுதந்திரமாக செயற்படுவதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளது.
ஆளும் தரப்பு எவ்வாறான சதி செயல்களில் ஈடுபட்டாலும் நீதித்துறையின் மீது எமக்கு நம்பிக்கை இருக்கின்றது. எதிர்க்கட்சிகளை முற்றாக இல்லாதொழித்து கம்யூனிச ஆட்சியை தோற்றுவிப்பதே இவர்களது நோக்கமாகும்.
கைது செய்யப்படும் சந்தேகநபர்கள் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழக்கின்றனர். இவை தொடர்பில் மக்கள் தெளிவு பெற வேண்டும். இவ்வாறு சந்தேகநபர்கள் உயிரிழப்பது சிறந்தது எனச் சிலர் எண்ணுகின்றனர்.
ஆனால், அது தவறாகும். நாட்டில் மரணதண்டனை கூட நிறைவேற்றப்படுவதில்லை. சிறைக்கைதிகளின் உரிமைகள் அரசமைப்பிலும் உள்வாங்கப்பட்டுள்ளன. அவ்வாறிருக்கையில் அவர்களைக் கொல்வதற்கு யாருக்கு என்ன உரிமையிருக்கின்றது?
சட்டமா அதிபர் திணைக்களம் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்ற நிலையிலும், அதற்கு இணையாகப் பிறிதொரு சட்ட நிறுவனத்தை நிறுவுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய பாதுகாப்பு குறித்து எமக்குக் கற்றுக்கொடுப்பதாகக் கூறியவர்களுக்கே தேசிய பாதுகாப்பு என்ன என்ற புரிதல் இல்லை.
அதனால்தான் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லை என்று கூறுகின்றனர். இந்த அழுத்தத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல அவரது சாரதியைக் கழுதை எனத் திட்டினார்.
இவர்களுக்கு அனுபவம் இல்லை என்பதை நாம் தேர்தலுக்கு முன்னரே குறிப்பிட்டிருந்தோம். அதனைத் தற்போது மக்கள் நடைமுறையில் காண்கின்றனர். நாட்டை ஆட்சி செய்ய முடியாவிட்டால் மீண்டும் ரணிலிடம் ஒப்படைத்து விட்டுச் செல்லுங்கள் என்று அநுர அரசிடம் கேட்டுக்கொள்கின்றோம்” என்றார்.