தற்போதைய அரசாங்கம் தமது இயலாமையை மறைத்துக் கொள்வதற்கு பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பான பழி ராஜபக்சர்கள் மீது சுமத்தப்படுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் மீதான அடக்குமுறைகளையும், அச்சுறுத்தலையும் அரசாங்கம் தற்போது தீவிரப்படுத்தியுள்ளது என்றும், நாமல் ஊருக்கு சென்றால் புதைகுழிக்கு செல்ல நேரிடும் என்று அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளமை மிகவும் பாரதூரமானது எனவும் கூறியுள்ளார்
அவர் மேலும், 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல சிறந்த திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அவற்றை தற்போது குறிப்பிடப்போவதில்லை. ஏனெனில் அவற்றை ஆளும் தரப்பின் 158 உறுப்பினர்கள் குறிப்பிடுவார்கள்.
குறைகளை சுட்டிக்காட்டுகிறேன். தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் 69 இலட்ச மக்களாணையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
ஏனெனில் எதிர்வரும் ஓரிரு மாதங்களில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைப்பெறவுள்ளது. கடந்த காலங்களில் பொதுஜன பெரமுன பற்றி பேசப்படவில்லை. ஆனால் தற்போது அதிகளவில் பேசப்படுகிறது.
அரசாங்கம் எதிர்க்கட்சிகள் மீதான அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தல்களை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.
அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் ஒருவர் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கிராமத்துக்குச் சென்றால் புதைகுழிக்கு செல்ல நேரிடும் என்று குறிப்பிடுகிறார்.
பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. இந்த பழியையும் அரசாங்கம் கடந்த அரசாங்கங்கள் மீது சுமத்துகிறது.
இது மிகவும் பாரதூரமானது. இது பத்தரமுல்லை அலுவலகத்தின் திட்டமா, மக்கள் விடுதலை முன்னணியின் உண்மையான முகம் தற்போது வெளிவருகிறது” என்றார்.