பாகிஸ்தானில் (Pakistan) பேருந்தொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் ஏழு பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் இன்று (19) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “ பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவாட்டா நகரில் இருந்து பஞ்சாப் மாகாணத்திற்கு பேருந்தொன்று சென்றுள்ளது.
இந்தநிலையில், பலூசிஸ்தானின் பர்ஹன் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஆயுதமேந்திய கும்பல் குறித்த பேருந்தை இடைமறித்துள்ளது.
பேருந்தில் இருந்த பயணிகளை கீழே இறக்கிய குறித்த கும்பல் அடையாள அட்டைகளை சோதித்துள்ளது.
இதையடுத்து, அதில் ஏழு பயணிகள் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் என தெரிந்ததும் அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், ஏழு பேரின் உடல்களையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.