சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்படுத்தல் திட்டத்தின் அளவுருக்களின்படி செயல்படுவது அரசாங்கத்தின் பொறுப்பு என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க(nandalal weerasinghe) கூறியுள்ளார்.
அதன்படி இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாட்டிற்கு ஒரு நல்ல விடயங்களை உள்ளடக்கியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,
“அரசாங்கத்தின் இலக்கைப் பார்க்கும்போது, இந்த முறை நாம் வரவு செலவு திட்டதில் அதிக நம்பிக்கை வைக்க முடியும்.
அரசாங்கப் பத்திரங்கள் மீதான குறுகிய கால அழுத்தங்களை உள்வாங்க ஹெட்ஜிங்கைப்(சொத்துகளிலிருந்து இழப்பு ஏற்படும் போது அபாயத்தைக் குறைக்க வடிவமைக்கப்பட்ட ஒரு சொத்தை வாங்கும் செயற்பாடு) பயன்படுத்துவது முக்கியமாகும்.
இது நமது பணவியல் கொள்கையின்படி நிலையான வட்டி விகிதங்களை பராமரிக்க உதவும்.
பல ஆண்டுகளாக IMF உடனான விவாதங்களில் பங்கேற்ற ஒருவர் என்ற ரீதியில், இந்த முறை ஒரு நாடாக, ஒட்டுமொத்த பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக சரியான திசையில் செல்ல வெளிப்புற பங்குதாரர்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் வரவு செலவு திட்டத்தில் மாறவில்லை என்று என்னால் கூற முடியும்.
நிர்வாகத்தில் மாற்றம் இருந்தபோதிலும், பேரண்டப் பொருளாதாரக் கொள்கைகளின் திசை மாறவில்லை.
IMF இன் ஒட்டுமொத்த பெரிய பொருளாதார நிலைப்படுத்தல் திட்டத்தின் அளவுருக்களுக்குள் செயல்படுவது அரசாங்கத்தின் பொறுப்பாக இருப்பதால், இதை ஒரு நேர்மறையான அறிகுறியாக நான் பார்க்கிறேன்” என்றார்.