தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களை உருவாக்கிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் சமீபத்தில் ‘கூரன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் பேசிய சந்திரசேகர், தன் மகனான தளபதி விஜய் எப்படி திரையுலகில் வளர்ந்தார் என்பதையும், ஒரு ஹீரோவிற்கு சரியான அங்கீகாரம் கிடைக்க, எப்படி ப்ரோமோஷன் செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக விளக்கினார்.
சந்திரசேகரின் இந்த பேச்சு, நிகழ்ச்சியில் இருந்த அனைவரையும் ஆச்சரியப்பட வைத்ததோடு, சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. அவர் தனது உரையில், புதிய இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்.
அவர் கூறியதாவது , “ஒரு படத்தின் வெற்றிக்கு, இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் ஆகியோர் மிக முக்கியமானவர்கள். ஆனால், அவர்கள் அனைவரும் புதுமுகமாக இருந்தால்தான், அந்த வெற்றி முழுவதுமாக ஹீரோவின் பெயரில் சேரும். அதனால் தான் என் மகன் விஜயை திரையுலகில் அறிமுகப்படுத்தும் போது, புதிய இயக்குநர்களை தேர்வு செய்தேன் ” என்றார்.
ஒரு நடிகர் முன்னணி நிலையை அடைய, மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் அத்தகைய இடத்தை அடையவேண்டும் என்றால் அதற்கு சரியான படம், சரியான விளம்பரம் மற்றும் சரியான முறையில் அவரை முன்னிறுத்த வேண்டும். அதனால்தான், நான் விஜயை பெரிய இயக்குநர்களை வைத்து கதை எடுக்காமல் புதிய இயக்குநர்களை கொண்டு நடிக்க வைத்தேன்.