நாடளாவிய ரீதியில் உபதபால் நிலையங்கள் மூடப்படும் அபாயம்

0 1

நாடளாவிய ரீதியில் உப தபால் நிலையங்கள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கத்தின் தலைவர் சிந்தக பண்டார ஊடக சந்திப்பொன்றை நடத்தி கருத்து வெளியிட்டுள்ளார்.

சிந்தக பண்டார தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தினால் போதிய வசதிகள் வழங்கப்படாமையால் பல உபதபால் அலுவலகங்கள் மூடப்படும் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன.

நகர்ப்புறங்களில் அமைந்துள்ள துணை தபால் நிலைய கட்டடங்களுக்கு மாத வாடகையாக 1,500 ரூபாயும், கிராமப்புறங்களில் 750 ரூபாயும் அரசால் வழங்கப்படுகின்றது. ஆனால் அந்தளவு சொற்பத் தொகைக்கு வாடகை கட்டடம் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது.

நீர், மின்சாரக் கட்டணங்களை அதிகாரிகள் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையால் இந்த நிலைமை மோசமடைந்துள்ளது. நாடளாவிய ரீதியில் 3,410 உப தபால் நிலையங்கள் அமைந்துள்ளதாகவும் அவற்றில் 3,351 தற்போது இயங்கி வருகின்றது.

அதன்படி நாடளாவிய ரீதியில் 59 உப தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

தபால் சேவையில் அதிகாரிகளின் பற்றாக்குறை காரணமாக உப தபால் நிலையங்கள் மூடப்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.

முழு தபால் சேவையிலும் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 27,372 ஆக இருந்தாலும், தற்போது 21,372 பேர் மட்டுமே தற்போதைக்குப் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும் சிந்தக பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.