பாணின் விலை தொடர்பில் பேக்கரி உரிமையாளர்கள் முன்வைத்த கோரிக்கை!

0 1

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 25ரூபாவினால் குறைக்கப்பட்டால், பாண் ஒன்றினை 100 ரூபாய்க்கு நுகர்வோருக்கு வழங்க முடியும் என அகில  இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் நேற்று முன்தினம் (13) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த கலந்துரையாடலில் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்ததாவது,“டொலரின் மதிப்பு குறைந்திருந்தாலும், ஒரு கிலோ கோதுமை மாவை 190 ரூபாய்க்கு வாங்க வேண்டியுள்ளது.

கோதுமை மாவு இறக்குமதிக்கு கிலோவுக்கு விதிக்கப்படும் ரூ.45 வரியைக் குறைத்து, கோதுமை மாவை இறக்குமதி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டால், நிறுவனங்களின் ஏகபோகம் உடைக்கப்படும்.

மேலும், உலக சந்தையில் ஒரு கிலோ வெண்ணெயின் விலை ரூ. 400 ஆக இருந்தாலும், உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ வெண்ணெயின் ரூ. 900 க்கு விற்கப்படுகிறது.

அத்துடன், வெண்ணெயின் மீது விதிக்கப்படும் கிலோவிற்கு 600 ரூபா என்ற வரி குறைக்கப்பதுடன் யார் வேண்டுமானாலும் வெண்ணெயை இறக்குமதி செய்ய அனுமதித்தால், அரசாங்கத்திற்கு அதிக வரி வருவாய் கிடைக்கும்.

இவை சாத்தியமாகுமானால் பேக்கரி பொருட்களின் விலைகளைக் குறைக்க முடியும்.

இதேவேளை, பாணின் விலை உயர்வு காரணமாக பாண் நுகர்வு குறைந்துள்ளது.” என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பேக்கரி உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கோதுமை மாவு மற்றும் வெண்ணெய் இறக்குமதியாளர்களை அழைத்து கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.