ஜனவரி 20 முதல் கனேடிய பொருட்கள் மீது வரிகள்: ட்ரம்பை சந்தித்த கனேடிய தலைவர் தகவல்

0 1

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தின் பிரீமியர், கடந்த வார இறுதியில் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்பை சந்தித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, ட்ரம்ப் வரிகள் விதிக்கப்போவது உண்மைதான் என்பதை உறுதி செய்துள்ளார் அவர்.

ஆல்பர்ட்டா மாகாண பிரீமியரான டேனியல் ஸ்மித் (Danielle Smith), ட்ரம்ப் சொல்லிவருவதுபோல, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது அமெரிக்கா வரிகள் விதிக்கப்போவது உண்மைதான் என்று கூறியுள்ளார்.

வரி விதிக்கப்படும் பொருட்களில் கச்சா எண்ணெயும் அடங்கும் என்று கூறியுள்ளார் அவர். ஸ்மித் அப்படிக் கூற காரணம், கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அதிகம் எடுக்கப்படும் கனேடிய மாகாணம் ஆல்பர்ட்டா மாகாணம்தான்.

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவிகித வரி விதிக்க இருப்பதாக ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், அப்படி ட்ரம்ப் வரிகள் விதித்தால், கனடாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது வரி விதிக்கும் என கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

ஆனால், ட்ரம்ப் தான் சொல்லியதில் எந்த மாற்றத்தையும் செய்யப்போவதில்லை, அதாவது, அவர் வரி விதித்தே தீருவார் என ஸ்மித் கூறியுள்ளார்.

அதுவும், கடந்த வார இறுதியில் ஸ்மித் ட்ரம்பை சந்தித்துள்ளார். அதைத் தொடர்ந்துதான், ட்ரம்ப் வரி விதிக்கப்போவது உண்மைதான், அமெரிக்க வரிகள் ஜனவரி மாதம் 20ஆம் திகதி அமுலாகப்போகின்றன.

அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கவேண்டும் என ஸ்மித் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.