சீனாவில்(China) பரவி வரும் எச்.எம்.பி.வி(HMPV) எனப்படும் மனித மெட்டாப்நியூமோ வைரஸ் ஒரு தொற்று நோய் அல்ல அதேவேளை, புதிய வைரஸும் அல்ல என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“குளிர்காலத்தில் இவ்வாறான சுவாச நோய்கள் ஏற்படுவது வழமையானதாகும். ஆனால், இது பொது சுகாதார அவசர நிலைமைக்குக் காரணமாக அமையாது.
அந்தவகையில் தற்போது சீனாவில் சுவாச நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருகின்றன.
இதன் அறிகுறிகளில் இருமல், சளி அல்லது மூக்கில் அடைப்பு, காய்ச்சல் மற்றும் தொண்டை புண் ஆகியவை அடங்கும். கடுமையான சந்தர்ப்பங்களில் மூச்சுத் திணறல் அல்லது மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியாவாக அதிகரிக்கும்.
2001 இல் கண்டுபிடிக்கப்பட்ட இது ஒரு புதிய வைரஸ் அல்ல. இது பொதுவாக சளி அல்லது காய்ச்சலைப் போன்ற அறிகுறிகளுடன் சுவாச நோய்த் தொற்றுகளை ஏற்படுத்துகின்றது.
சில சமூக ஊடகப் பதிவுகள் நெருக்கடியை ஏற்படுத்துகின்றன. ஆனால், சீனா அல்லது உலக சுகாதார ஸ்தாபனம் பொது சுகாதார அவசரகால நிலையை அறிவிக்கவில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.