மரண தண்டனை கைதியான துமிந்த சில்வா, சிறைச்சாலை மருத்துவமனையில் சிறப்பு வசதிகளைப் பெறுவதாக வெளியான செய்திகளை சிறைச்சாலை திணைக்களம் மறுத்துள்ளது.
மேலும், துமிந்த சில்வா சிகிச்சை பெற்று வரும் தங்கி சிகிச்சைப்பெறும் அறையின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
சிறைச்சாலை மருத்துவமனையின் அரை எண் 3 இல், 50க்கும் மேற்பட்ட கைதிகளுடன் துமிந்த சில்வா சிகிச்சை பெற்று வருவதாகவும், சிறைச்சாலை பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆரம்பத்தில் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டபோது அவருக்கு சிகிச்சை அளித்த நிபுணரின் ஆலோசனையின் அடிப்படையில், ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையின் இயக்குநர், துமிந்த சில்வாவுக்கு சிகிச்சை அளிக்க பரிந்துரைத்ததாகவும் திசாநாயக்க கூறியுள்ளார்.
சில்வா தற்போது சிறை மருத்துவர்களின் மேற்பார்வையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் துமிந்த சில்வா சிறைச்சாலை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க சிறைச்சாலைத்திணைக்களம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம், முறையான கோரிக்கையை முன்வைத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
நிலைமையை மதிப்பிடுவதற்கு ஒரு மருத்துவக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது,
மேலும் அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் சிறைச்சாலைத் திணைக்களம் மேலதிக நடவடிக்கைகளை எடுக்கும் என்று பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, துமிந்த சில்வா உட்பட சிறையில் உள்ள சில கைதிகளுக்கு சிறைச்சாலைத்திணைக்களம்,சிறப்பு வசதிகளை வழங்குவதாக கைதிகள் உரிமைகள் குழு குற்றம் சுமத்தியிருந்த நிலையிலேயே இந்த தெளிவாக்கல்களை சிறைச்சாலைகள் பேச்சாளர் வழங்கியுள்ளார்.
இரண்டு முதற்கட்ட விசாரணைகள் மற்றும் தள ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும், இதன்போது, சில்வாவுக்கு தனி கழிப்பறை அல்லது வேறு எந்த சிறப்பு சிகிச்சையும் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்ததாகவும், சிறைச்சாலைகள் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார் .