மலையக பகுதியில் தோட்டப்புறங்களில் வாழுகின்ற அனைத்து மாணவர்களுக்கும் அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்படும் 6,000 ரூபா கொடுப்பனவினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் ( Raman Senduran) வேண்டுகோள் விடுத்தார்.
வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு ஒன்று மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தலைமையில் நேற்று (03) நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஆகரஊவா தமிழ் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் ராமர் கிப்ஸன் ஸ்டாலின் தலைமையில நடைபெற்றது.
கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், பெருந் தோட்டப்பகுதிகளில் இன்று பொருளாதார நெருக்கடி காரணமாக பல மாணவர்கள் கற்றலை தொடர முடியாது, இடை விலகுகின்றனர்.
இதனால் பல்வேறு நெருக்கடிகள் உருவாகியுள்ளன. வறுமை காரணமாக சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தும் பணிகளும் அதிகரித்துள்ளன. இதனால் பல்வேறு சமூக பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
தொழிலாளர்களுக்கு கிடைக்கின்ற வருமானத்தினை கொண்டு இன்று அவர்களுக்கு மூன்று நேர உணவினை கூட உண்ண முடியாத நிலை இல்லாத போது, அவர்கள் எவ்வாறு அவர்களின் பிள்ளைகளை படிக்க வைப்பது என்ற கேள்வி உருவாகியுள்ளது.
எனவே இது மலையகத்தினை மாத்திரமின்றி கல்வி ரீதியாக நாட்டினையும் பாதிக்கும்.
எனவே அரசாங்கம் வழங்குகின்ற ஆறாயிரம் ரூபா கொடுப்பனவினை பெருந்தோட்டப் பகுதியில் வாழுகின்ற அனைத்து மாணவர்களுக்கும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.