சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பான புலனாய்வு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ(Lieutenant General Lasantha Rodrigo) பாதுகாப்புப் படைத் தளபதிகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்தியுள்ளதாக சிறிலங்கா இராணுவம்(sri lanka army) தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரால் சேகரிக்கப்பட்ட தகவலின் பிரகாரம், காவல்துறையினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 451 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 3570 கிலோ கஞ்சா, 1040 கிலோ கேரள கஞ்சா, சுமார்11 கிலோ ஐஸ் மற்றும் 61 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், சுமார் 850 லீற்றர் சட்டவிரோத உள்நாட்டு மதுபானம் மற்றும் 15000 லீற்றர் கோடா மற்றும் 68 வெளிநாட்டு மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 7340 கிலோ பீடி இலைகளும் கைப்பற்றப்பட்டன.
இராணுவத்தினரால் சேகரிக்கப்பட்ட புலனாய்வு தகவலின்படி, காவல்துறையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, கொட்டாஞ்சேனை, மாளிகாவத்தை, கொள்ளுப்பிட்டி, நீர்கொழும்பு மற்றும் வெல்லவீதிய பிரதேசங்களில் சுமார் 170,000 சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், யால காப்புக்காடு, உடவலவ பிரதேசங்களில் கிட்டத்தட்ட 3459 கிலோகிராம் கஞ்சாவும் 440,000 கஞ்சா செடிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.